
உற்சாகம் என்பது ஓர் அற்புதமான வார்த்தை. உற்சாகம்தான் வாழ்க்கைக்குச் சுவையூட்டுகிறது. உண்மையில், அது வாழ்க்கையைச் சிறப்பானதாக ஆக்குகிறது. ஆனால் இன்று மக்களிடையே உற்சாகம் மிகவும் குன்றியுள்ளதுபோலத் தெரிகிறது. அவர்கள் எப்போதும் உளச்சோர்வுடனும் சுரத்தின்றியும் இருக்கின்றனர். அவர்களிடமிருந்து உற்சாகம் வெளியேறிவிட்டது, சந்தேகமும் அவநம்பிக்கையும் உள்ளே புகுந்துவிட்டன.
உற்சாகம் இல்லாததுதான் தங்கள் வாழ்க்கை ஒரு சூனியமாக ஆகியுள்ளதற்குக் காரணம் என்பதை இறுதியில் அவர்கள் உணர்ந்து கொள்வர். ஏனெனில், உற்சாகம்தான் வாழ்க்கையை இனிமையானதாக ஆக்குகிறது. நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள்? வாழ்க்கை பல சவால்களை உங்களை நோக்கி வீசி உங்களிடமிருந்து உற்சாகத்தை வெளியேற்றியிருக்கக்கூடும். அல்லது, உற்சாகம் என்பது முந்தைய தலைமுறையினருக்கு உரியது என்றும், அது அத்தலைமுறையினரோடு முடிந்துவிட்டது என்றும் நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் இப்படியெல்லாம் வீணாகக் கற்பனை செய்யாதீர்கள்.
உற்சாகத்தை மீண்டும் உங்கள் வாழ்விற்குள் கொண்டுவாருங்கள். உற்சாகம் இல்லாத ஒரு வாழ்க்கை மிகவும் ஏழ்மையான ஒரு வாழ்க்கையாகும். உற்சாகம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். அது உங்களை வலிமையானவராக உணரச் செய்யும்.
உங்கள் சொந்த மதிப்பை அது உங்களுக்கு உணர்த்தும். உற்சாகம் உங்களை ஆட்கொள்ளும்போது நீங்கள் இவ்வுலகை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவீர்கள்.
உற்சாகம் உங்களை ஆட்கொள்ள அனுமதிக்கும்போது உங்களைப் பற்றி நீங்கள் அற்புதமாக உணர்வீர்கள். உற்சாகத்தை எதிர்க்காதீர்கள். நிராகரிக்காதீர்கள். அதைத் துரத்திவிடாதீர்கள். உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டதாகச் சாக்குப்போக்குக் கூறாதீர்கள் மாறாக, உற்சாகம் உங்கள் வாழ்விற்குள் நுழைய அனுமதியுங்கள், அப்போது உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக ஆகிவிடும்.
உற்சாகம் என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது என்று பலர் நினைக்கின்றனர். அளவுக்கதிகமாகக் கூச்சல் போட்டுக்கொண்டு, மேலோட்டமாகச் செயல் படுகின்றவர்கள் அவர்கள் என்று மக்கள் கருதுகின்றனர். உற்சாகமான நபர்களிடம் துடிப்பு இருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால் உண்மையிலேயே உற்சாகமாக இருப்பவர்களிடம் அந்தத் துடிப்பு அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. "தன்மீது கட்டுப்பாடு கொண்டு அமைதியாக இருக்கின்ற உற்சாகவாதிகளுக்கே இவ்வுலகம் சொந்தம்," என்று ஆங்கிலேய எழுத்தாளரான வில்லியம் மெக்ஃபீ கூறியுள்ளார்.
நீங்கள் உற்சாகமாக இருங்கள். ஆனால் அந்த உற்சாகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திடுங்கள். அப்போது, உங்களால் முடிச்சவிழ்க்க முடியாத எந்தச் சிக்கலும் இருக்காது.