
சில நேரங்களில் நாம் ஒதுங்கிப்போனால் கூட நம்மிடம் நன்றாக பழகியவர்களே வழிய வந்து ஏதாவது பேசி பிரச்னை செய்வதும் உண்டு. நாம் வாயைத் திறந்து அதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும், அப்பொழுதும் ஏதாவது கோபமூட்டுவார்கள். பேசாமல் இருந்தாலும் திட்டுவார்கள். இரண்டு மூன்றுமுறை அவர்களின் திட்டுக்களைப் பொறுத்துக்கொண்டு விட்டு விட்டோமானால், மீண்டும் அவர்கள் நம்மை சீண்டமாட்டார்கள். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அந்த நேரத்தில் நாம் பொறுமை காக்க வேண்டியது மிக அவசியம். அப்படி காத்துவிட்டால் காலம் முழுவதுமே நாம் நிம்மதியாக ஆக்கபூர்வமாக வாழ முடியும். அதற்கான ஒரு சிறு கதை இதோ.
ஒரு யானை ஆற்றில் குளித்துவிட்டு மறுகரைக்குச் செல்ல தயாரானது. மறுகரையில் பன்றி ஒன்று சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தது. சுத்தமாக இருக்கும் யானையைக் கண்ட பன்றிக்கு பொறாமை உண்டானது. யானையைச் சீண்டி பார்க்க முடிவெடுத்து, ஆற்றின் குறுக்கே இருக்கும் மிகவும் குறுகிய பாலத்தின் வழியாக யானையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது. யானை பாலத்திற்குள் நுழைந்து நடுப்பகுதிக்கு வந்துவிட்டது.
பன்றி உடனே யானையை நோக்கி ஓடியது. ஒடுக்கமான பாலம் என்பதால் எப்படியும் தன் உடம்பில் இருக்கும் சேற்றினை யானை மீது தற்செயலாக மோதுவது போல் பூசிவிடலாம் என கணக்குப் போட்டது. சுதாரித்துக்கொண்ட யானை சுவர் ஓரமாக நன்றாக ஒதுங்கி நின்று பன்றிக்கு வழிவிட்டது. பன்றி ஏமாந்துபோக இனியும் வம்புக்கு போனால் ஆபத்தாகிவிடும் என பயந்து அப்படியே சென்றுவிட்டது.
மறுகரையில் நின்ற தன் நண்பனான மற்றொரு பன்றியிடம் "நண்பா! பார்த்தாயா? பயந்தாங்கொள்ளி யானை! நன்றாக சாப்பிட்டு கொழுத்து இருப்பதுதான் மிச்சம். சிறியவனான என்னைக்கூட பார்த்து பயந்து கொண்டு போவதைப் பார் என்று சொல்லிச் சிரித்தது. அதைக் கேட்ட நண்பன் ஏய் முட்டாள்! அப்படி நீ எண்ணாதே.
யானை ஆற்றில் குளித்துவிட்டுப் போகிறது. நீயோ சேற்றில் குளித்துவிட்டு அழுக்குடன் திரிகிறாய். ஒருவேளை யானையின் காலில் நீ சிக்கி இருந்தால் ஒரே மிதியில் உன் உயிர் போய்விடும். ஆனாலும் அந்த யானை உன்னை மிதித்து தன் காலை சேறு ஆக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் ஒதுங்கி போனது என்பதைப் புரிந்துகொள் என்றது.
முகம் தெரிந்தவர்களும் முகம் தெரியாத எதிரிகள்போல் தீங்கிழைத்தால் அதை நாம் மறந்துவிட வேண்டும். குறிப்பாக இதைத்தான் மறத்தல் என்பது. தாங்கள் முக்கியமானவர்கள் என்ற அகந்தையை வெளிப் படுத்தவே அவர்கள் தீமை செய்து மகிழ்கிறார்கள். தள்ளி இருந்து ஒரு நாடகம்போல இதை ரசிக்கக் கற்றுக் கொண்டால் போதும். ஆக்கபூர்வமாக எப்போதும் போல் நம்மால் வாழமுடியும்.
அடக்கமுடையர் அறிவு இலர் என்றெண்ணி கடக்க கருதவும் வேண்டாம். என்பதை நினைவில் கொள்வோம்.
விட்டுக் கொடுப்பவர்கள்
விவாதம் செய்ய
தெரியாதவர்கள் அல்ல...
விரும்பியவர்களின் மனம்
விவாதத்தை விட உயர்ந்தது
என்று உணர்ந்தவர்களே!