
நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும் அறிவுரைகளை கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்க்கையில் செயல்படுத்தி அதன் மூலமாக மேன்மையடைய வேண்டியது அவசியமாகும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கென்று சொத்துக்கள் எதுவும் கிடையாது. அவர் அணிந்திருக்கும் ஆடை மற்றும் அவர் கையிலே வைத்திருக்கும் ஒரு மூட்டையை தவிர வேறு எதையும் வைத்திருக்கவில்லை.
அந்த துறவிக்கு ஒரே ஊரில் இருந்து பழக்கமில்லை. ஒவ்வொரு ஊராக போய்க் கொண்டேயிருப்பார். அப்படி செல்லும்போது அங்கிருக்கும் மக்களுடைய துன்பங்களை போக்க அறிவுரையைக் கூறுவார். அப்படியில்லை என்றால் அவர் வைத்திருக்கும் மூட்டையிலிருந்து ஏதேனும் பொருட்களை எடுத்துக் கொடுப்பார்.
அப்படி அவர் சென்ற ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் தன்னுடைய தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதை துறவியிடம் சொல்லி அழுதுக் கொண்டிருந்தார். துறவியும் சற்று யோசித்துவிட்டு அவருடைய மூட்டையில் இருந்து ஒரு சிறு மரப்பெட்டியை எடுத்து வியாபாரியிடம் கொடுத்தார். துறவி வியாபாரியிடம், ‘இதை உன் வீட்டிற்கு எடுத்துச்சென்று திறந்துப்பார் என்று கூறினார். இந்த மரப்பெட்டியில் ஒரு புதையல் இருக்கிறது. அது உனக்கு நான்கு ரகசியங்களை சொல்லும். அந்த நான்கு ரகசியங்களை நீ தெரிந்துக்கொண்டால் மென்மேலும் வளரலாம்’ என்று கூறினார்.
அந்த வியாபாரியும் தன்னுடைய வீட்டிற்கு அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைத்து திறந்துப் பார்க்கிறார். அந்த பெட்டிக்குள் ஒரு மணி, ஒரு ரூபாய் நாணயம், ஒரு சிப்பி, ஒரு முத்து இருக்கிறது. இதைப் பார்த்த வியாபாரிக்கு ஒன்றுமே புரியவில்லை. துறவி நம்மிடம் அந்த பெட்டிக்குள் புதையல் இருக்கிறது என்றார். ‘நான்கு பொருட்களும் நான்கு ரகசியத்தை உணர்த்தும் என்றாரே’ என்று யோசித்துப் பார்க்கிறார். ஆனால், அவரால் எதையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
அடுத்தநாள் முதல் வேலையாக வியாபாரி துறவியிடம் சென்று அந்த பெட்டியில் இருக்கும் நான்கு பொருட்களுக்கான அர்த்தத்தைக் கேட்டார்.
அதற்கு துறவி சொன்னார், ‘இந்த பெட்டியில் இருக்கும் பொருட்களில் மணி நேரத்தையும், ஒற்றை ரூபாய் நாணயம் பணத்தையும், சிப்பியும் முத்தும் சேர்ந்து வார்த்தையையும் குறிக்கிறது. எவன் ஒருவன் தனது நேரத்தை சரியாக கையாளுகிறானோ? அவன் ஒருவனே தனது வாழ்கையை சரியாக கையாளுகிறான். எவன் ஒருவன் தன் பணத்தை கணக்கிட்டு செலவிடுகிறானோ? அவனிடமிருந்து அந்த செல்வம் நீங்காது. எவன் ஒருவன் தன் வார்த்தைகளை சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துகிறானோ? அவனே வெற்றியை தக்கவைத்துக் கொள்கிறான் என்று துறவி விளக்கினார்.
உடனே வியாபாரி கேட்டார், ‘நேற்று என்னிடம் நான்கு ரகசியங்கள் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது மூன்றுதானே சொல்லியிருக்கிறீர்கள். அந்த நான்காவது ரகசியம் என்ன?’ என்று கேட்டார். அதற்கு துறவி சொன்னார், ‘இப்போது நான் சொன்ன மூன்று ரகசியங்களையும் கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்க்கையில் செயல்படுத்தினால் மட்டுமே வெற்றிக் கிடைக்கும் என்பதே நான்காவது ரகசியமாகும்’ என்று சொல்லிவிட்டு அந்த ஊரிலிருந்து கிளம்பி போனார் அந்த துறவி.
இந்தக் கதையில் வந்ததுபோல, நாம் அறிவுரைகளை கேட்டால் மட்டுமே போதாது. அதை செயல்படுத்தினால் தான் வெற்றிப்பெற முடியும். இதைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் முயற்சித்துப் பாருங்கள்.