
உழைப்பு இல்லை என்றால் வாழ்வில் உயர்வு கிடையாது. ஊக்கமும், இடைவிடாத முயற்சியும் எதிலும் வெற்றியை பெறச்செய்யும். உழைப்பே உயர்வுதரும். நமக்கான வேலையை சிறப்புடன் செய்யப்பாடுபடுவதே உழைப்பு. எந்த அளவிற்கு உழைக்கிறோமோ அந்த அளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும். எனவே கடின உழைப்பை கைவிடாது இருத்தல் வேண்டும். சிலர் வாய் பேச்சாக வாழ்வில் முன்னேற வேண்டுமென்று கூறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் செயல்களில் ஒன்றும் இருக்காது.
உழைப்புதான் வெற்றிக்கு ஒரே வழி. அயராது உழைத்தால்தான் நம் லட்சியத்தை அடைய முடியும். உழைப்பு என்பது நம்முடைய திறமைகளையும், ஆற்றல்களையும் பயன்படுத்தி ஒரு வேலையை செவ்வனே செய்வதாகும். உழைப்பின்றி எந்த காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. உழைப்பின் முக்கியத்துவம் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கும், நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், சமூகத்திற்கு நம்மாலான பங்கை அளிப்பதற்கும் இன்றிமையாத ஒன்று.
உழைப்பின் மூலம் பொருளீட்டி வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளலாம். உழைப்பின் மூலம் நம் திறமைகளை வளர்த்துக் கொண்டு தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் முன்னேற்றம் அடையலாம்.
வாழ்வில் உழைப்பின்றி உயர்வில்லை. வாழ்க்கையில் புதிது புதிதாக கற்றுக் கொள்ளவும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் சோம்பலின்றி கடின உழைப்பின் மூலம்தான் பெற முடியும். இதுவே நம்மை சுயமரியாதையுடனும் மதிப்புடனும் வைத்திருக்கும்.
உழைப்பின் மூலம் நம்முடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் நம்மால் பங்களிக்க முடியும். உழைப்புதான் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும். உழைப்பின் உயர்வை நாம் மட்டும் அறிந்தால் போதாது. நம் பிள்ளைகளுக்கும் உழைப்பின் முக்கியத்துவத்தை சொல்லித் தருதல் அவசியம். அற்புதமான செயல்திறனுடன் சரியான நேரத்தில் விஷயங்களை சிறப்பாக செய்வதுதான் உழைப்பிற்கான உயர்வு.
கடின உழைப்புடன் புத்திசாலித்தனமான அணுகுமுறையும் அவசியம். தொடர்ச்சியான பயிற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட வெற்றிக்கு வழிவகுக்கும். கடினமான உழைப்பை முதலீடாக போட்டு கஷ்டங்களை சமாளிக்கவும், இலக்குகளை அடையவும், வெற்றிக் கனியை பறிக்கவும் உழைப்புடன் விடாமுயற்சியும் அவசியம்.
உழைப்பின்றி உயர்வில்லை உண்மைதானே!