
உங்கள் பேச்சு, சிரிப்பு, ஏன் உட்காரும் விதம் போன்ற சின்னச்சின்ன அசைவுகள் கூட உங்கள் நடத்தை எத்தகையது என்பதை உலகத்திற்கு அறிவித்துவிடுகிறது. உங்கள் நடத்தை மூலமே உங்கள் பண்பாட்டை உலகம் தீர்மானிக்கிறது. உங்களிடம் வேலை பார்க்கிற பணியாளரை ஒரு காரியத்திற்கு ஏவும்போது கூட ப்ளீஸ் என்ற வார்த்தையை உபயோகிப்பது, தவறுக்காக சாரி கேட்பது, நன்றி காட்டும் விதமாக தாங்க்ஸ் சொல்வது எல்லாமே உங்களுடைய நன்னடத்தையின் அடையாளம்தான்.
ஒரு நிகழ்வின்போது எப்படி பிரதிபலிக்கிறீர்கள் என்பதும் உங்கள் நடத்தையின் பாதிப்புகள்தான். பெண்கள் மத்தியில் புகைக்காமல் இருப்பது, தான் இருக்கும் அறைக்குள் ஒரு பெண் நுழையும்போது எழுந்து நிற்பது, அவளுக்காக கதவை திறந்துவிடுவது உங்கள் நற்பண்பை வெளிக்காட்டுபவைதான்.
உங்கள் கடிதத்தை அடுத்தவர் பிரிப்பதையோ, உங்களுடைய டைரியை அடுத்தவர் புரட்டுவதையோ நீங்கள் விரும்புவீர்களா?. அப்படித்தான் அடுத்தவர்களும். எப்போதும் ஒரு குறிப்பிட்ட நிலையை பராமரித்துக் கொள்வதை ஆங்கிலத்தில் Poise என்பார்கள்.
எதிலும் நிதானத்தை கடைபிடிக்கிறவனுக்கு தன்னம்பிக்கை அதிகம். அவருடைய பேச்சைப் போலவே மௌனமும் கம்பீரமாக இருக்கும். அவரால் எந்த சூழ்நிலையிலும் தன்னை பொருத்திக் கொள்ளமுடியும். அவருடைய இயல்பான தோற்றம் மற்றவர் மனதில் பதியத்தக்க அம்சமாகிறது. நிதானம் சுலபத்தில் வந்து விடாது. அது அனுபவத்தில் மட்டுமே வரக்கூடியது. வாழ்வில் பல்வேறு நிலைகளை அனுபவித்த பவர்களுக்கு எல்லாவற்றையும் ஒரேமாதிரி பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.
ஒரு சீனியர் அதிகாரிக்கு நிறைய அனுபம் இருக்கலாம். நான் நேற்றுதான் இந்த பொசிஷனுக்கு வந்தவன் எனக்கு எந்த அனுபவமும் கிடையாதே என்று கேட்பவா நீங்கள்? கவலை வேண்டாம். உங்களைப் போன்ற இளைஞர் களுக்கு இளமையே ஒரு சாதகமான அம்சம். கண்களையும், காதுகளையும், இதயத்தையும் விரியத் திறந்துவையுங்கள்.
உங்களுக்கு போதிக்கும், அனுபவத்தை வழங்கவும் ஆயிரம் விஷயங்கள் உலகத்தில் உண்டு. சிலவற்றை திரைப்படங்களில் இருந்தும், புத்தகங்களில் இருந்தும், நண்பர்களுடன் பேசுவதிலும் கிரகித்துக்கொள்ள முடியும். உங்கள் நடத்தை வெளிப்பாட்டில் கவனமாக இருங்கள்.