உன் பாதை, உன் வெற்றி! அடுத்தவருடன் உன்னை ஒப்பிடாதே!
நம்முடைய வாழ்க்கை என்பது மிகவும் ஆழமான பள்ளத்தை போன்றது. தோண்டத் தோண்ட பல மர்மங்களும் பிரச்னைகளும் வந்துகொண்டே தான் இருக்கும்.
இந்த தோண்டுதலானது, பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. எல்லோருமே இன்பம், துன்பம், நஷ்டம், லாபம், பிரிவு, சண்டை, சமாதானம் என பலவிதமான பாதைகளை தங்களுடைய வாழ்க்கையில் கடந்துதான் செல்கிறார்கள்.
ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமான வாழ்க்கை அமைகிறது. உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தையே எடுத்துக் கொண்டால், கணவனைப்போல மனைவிக்கும் மனைவியைப்போல கணவனுக்குமே வாழ்க்கை அமையாது. அதைப்போல குழந்தைகளுக்கும் வேறுபட்ட எண்ணங்களும் வாழ்க்கையும் இருக்கும். ஒரு குடும்பத்திற்குள்ளேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றபோது ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிச்சயமாக வேறு படத்தானே செய்யும். இதை நாம் சிந்திப்பதே இல்லை. சிந்திக்காமல் அடுத்தவர்களின் வாழ்க்கை முறையோடு நம்மை எப்போதும் ஓப்பிட்டு பார்த்து கொண்டே புலம்பி புலம்பி வாழ்க்கையையே வீணடித்து கொள்கிறோம்.
வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்னும் ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியும் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் நாம் செய்கின்ற தவறு என்னவென்றால் மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைப் பார்த்து பார்த்தே நமக்கான நேரத்தை செலவழித்து விடுகின்றோம்.
இன்னும் ஒரு சிலர், நான் என்ன செய்தாலும் பயனளிக்காது, வெற்றியே கிட்டாது, நான் எதற்கும் பிரயோஜனமில்லாதவன் என்றெல்லாம் தனக்கு தானே புலம்பி கொண்டு தன்னையே தாழ்த்தி கொள்கிறார்கள்.
இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு வாழ்வதற்கே விருப்பமில்லாமல் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள்.
நமக்கு எது தேவையோ, எது ஒத்து போகுமோ அதற்கேற்றவாறுதான் நம் வாழ்க்கையை நாமே அமைத்து வாழவேண்டும். அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள், எப்படி நினைப்பார்கள் என்றெல்லாம் யோசித்து கொண்டிருந்தால் நம் வாழ்க்கையை நம்மால் நிம்மதியாக வாழ இயலாது. தோல்வி மேல் தோல்விதான் ஏற்படும்.
உதாரணத்திற்கு நம் கையில் உள்ள ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உயரத்திலும் பருமனிலும் வேறு பட்டுதான் இருக்கிறது. நீங்கள் எந்த விரலுக்கு மோதிரம் அணியவேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களோ அதற்கேற்ற அளவில்தானே வாங்க வேண்டும். சுண்டு விரல் மோதிரத்தை மோதிர விரலிலோ அல்லது பெரு விரலிலோ போட முடியுமா?? விரலுக்கேற்றவாறு தானே adjust செய்ய வேண்டும்.
ஒருவேளை தெரியாமல் சற்று சிரியதாகவோ அல்லது பெரியதாகவோ வாங்கி விட்டால் என்ன செய்வோம்? உடனே கடைக்குச் சென்று அதை சரியான அளவிற்கு சரி செய்து கொண்டு வருவோம் இல்லையா? அதைப் போலத் தான் வாழ்க்கையும். நமக்கேற்ற திட்டத்தை நிதானமாக யோசித்து பிரச்னைகளை கையாளவேண்டும். அப்படி செய்த போதும் ஒருவேளை எதாவது ஒரு விதத்தில் மறுபடியும் தோல்வி ஏற்பட்டால், எங்கு, எப்படி, எதை ஏற்ற வேண்டும், எதை குறைக்க வேண்டும் என்று சிந்தித்து செயல் பட நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்குத்தானே ஒழிய வீழ்வதற்கில்லை! (motivational articles)