
அளவற்ற சுகங்களை அனுபவிக்க வேண்டும்; ஏராளமான இன்பங்களைத் துய்க்க வேண்டும் என்பதே மனித மனத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இன்பம் பெறுவதே இலக்காக இருக்கும் வரை துன்பம் நிழலைப்போல் தொடர்ந்து வருவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.
உண்மையில் வாழ்வில் நாம் நம் இலக்காக நிர்ணயிக்க வேண்டியது, சுகபோகங்களோ இன்பங்களோ அல்ல. இன்பம் துன்பம் ஆகிய இரட்டை நிலையைக் கடந்த அமைதி நிலையே நீங்கள் அடையத்தக்க சரியான இலக்காக இருக்க முடியும்.
இந்த அமைதிநிலையை அடையவேண்டுமானால், வாழ்வின் எல்லா நிலைகளிலும் சமநிலையில் சலனமின்றி நிற்கக்கூடிய பக்குவத்தை மனம் பெற்றிருக்க வேண்டும்.
இது சற்றுச் சிரமமான காரியம்தான். ஆனால், சாத்தியமாகக் கூடிய காரியம். இந்தப் பக்குவம் மட்டும் உங்களுக்கு வாய்த்து விடுமேயானால், அதன் பின் வாழ்க்கை அதன் சகல பரிமாண களிலும் உங்களுக்குச் சுகமயமானதாகவே தெரியும்."
சமநிலையில் நிற்பது என்பது சைக்கிள் ஓட்டுவது மாதிரி. ஆரம்பத்தில் சைக்கிள் பழகும்போது இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று எந்தப் பக்கமாவது சாய நேரிடும். இதைக் தவிர்க்க இயலாது. இப்படி ஒரு பக்கமாகச் சாய்ந்து விழக்கூடிய இடர்ப்பாடு கொண்டதாகவே அமைந்திருக்கும். ஆனால், சற்றுப் பழக்கமான பின், எந்தப் பக்கமாவது சரியக்கூடிய நிலையைக் கடந்த பின் சைக்கிள் ஓட்டுவது அவனுக்குச் சிரமமான காரியமாக இராது.
இப்படியே, வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் என்னும் இரண்டு பக்கங்களில் எந்த ஒரு பக்கமும் சாயாமல் நடுநிலையில், சமநிலையில், நின்றால் அதுவே அமைதி நிலை.
ஆனால், பெரும்பாலான மனிதர்கள் வாழ்வின் இரு பக்கங்களில் ஏதாவது ஒரு பக்கமாகச் சாய்பவராகவே காணப்படுகிறார்கள். இப்படி ஒருபக்கச் சார்பு, சாய்வு, இருக்கும் வரை வாழ்க்கை ஒரு ஊசலாட்டமாகவே அமையும். வாழ்வின் ஆனந்தம் உணரப் படாமலேயே காலம் கழிந்துகொண்டிருக்கும்.
அனைவருக்கும் இன்பத்தின் நாட்டமே இருப்பதால் அவர்களின் முயற்சி அந்த இன்பம் இருக்கும் பக்கமாகச் சாய்வதற் காகவே நடக்கிறது. ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. ஏற்கெனவே கூறியது போல் இது ஓர் ஊசலாட்டம் மாதிரி. கடிகார ஊசலியைக் (pendulum) கவனித்திருப்பீர்கள். அது ஒரு பக்கம் எவ்வளவு தூரம் செல்கிறதோ அதற்கு எதிர்த்திசையிலும் அவ்வளவு தூரம் செல்லும்.
வாழ்வியல் விதியும் கிட்டத்தட்ட இதே தன்மையுடையதுதான். சுகநாட்டமும் இன்பவெறியும் கொண்டு அந்தத் திசையில் ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறானோ, அதே தூரத்திற்குத் துன்ப துயரங்களாகிய பாதையிலும் அவன் பயணிக்க நேரிடும். இது நிச்சயமான நியதி.