
எல்லோர்க்கும் நல்லவனாக இருக்க முயல்வது ஒரு போலி வாழ்க்கை. நடைமுறைக்கு சாத்தியப்படாதது.
நல்லவர்க்கு மட்டும் நல்லவராக இருங்கள்; போதும். இக்காலத்தில் அப்படிப்பட்ட மனிதர்களைக்கூட காண்பது அரிதாகிவிட்டது.
ஏமாற்றுக்காரனைக் கண்டால் மற்றவர்கள் விலகி. ஓடிவிடுகிறார்கள். நல்லவனைக் கண்டால் ஏமாற்றுவதற்குத் மற்றவர்கள் எல்லாம் திட்டமிடுகிறார்கள். உலக இயல்பைப் புரிந்து கொள்ளுங்கள்.
நல்ல பெயர் எடுப்பதற்காக நல்லவனாக இருக்காதீர்கள். நல்லவனாக இருப்பதால் நல்ல பெயர் கிடைத்தால் கிடைக்கட்டும்; கிடைக்காவிட்டாலும் கவலையில்லை என்று உங்கள் இயல்புப்படி வாழுங்கள்.
நல்லவனாகப் பெயர் எடுக்க முயன்று ஒரு நல்லது செய்யப் போனால் அதனால் உங்களுக்குப் பெருமை கிடைக்காது. இவன் 'நல்லவன்' என்று எல்லோரும் நினைக்கவேண்டும் என்பதற்காக ஏதாவது செய்பவன் என்று உங்களைப் பற்றிக் குறைவான மதிப்பீடுதான் மற்றவர்களுக்கு உண்டாகும்.
இந்த மதிப்பீடுதான். மற்றவர்கள் உங்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும்படி தூண்டுகிறது.
மற்றவர்கள் உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்.ஆனால் உங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
மற்றவர்களுக்குப் பணிசெய்ய முன்வாருங்கள். ஆனால், வேண்டா வெறுப்பாக அதைச் செய்வதாக இருந்தால், அதைச் செய்ய வேண்டாம்; விலகிவிடுங்கள்.
கோபத்தில் பிறரைக் காயப்படுத்துகிற சொற்களைக் கையாளாதீர்கள். தீயசொற்களை அறவே தவிர்த்து விடுங்கள்.
எல்லா சூழல்களிலும் நல்ல பண்புள்ளவராக நடந்து கொள்வது கடினம்தான். மோசமான சூழ்நிலை நிலவும் இடத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள். சூழலின் கடுமைக்கு உங்கள் நற்பண்பை இரையாக்கி விடாதீர்கள்.
அருள் உணர்வு மிக்க உங்கள் மனதை போற்றிக் காப்பற்ற வேண்டிய கடமையும் உங்களுக்கு உண்டு; மறந்து விடாதீர்கள்.
மற்றவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து நடக்குமாறு நம்மை மரியாதையால் நிரப்புகிறது.
தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காக எதையும் செய்யாமல், பிறர் தேவைகளைக் குறிப்பறிந்து உங்கள் சக்திக்கு உட்பட்ட உதவிகளைச் செய்தல் உங்கள் மீது மற்றவருக்கு நேசத்தை விளைவிக்கும்.
அதே வேளையில், யார் வந்து என்ன உதவிகேட்டாலும் உடனே செய்பவர் என்று உங்களை மற்றவர் எண்ணிவிட இடம் தரலாகாது. உங்களுக்கென்று வாழ்க்கை உண்டு. கடமை உண்டு, தேவை உண்டு.
பிறருக்கு உழைப்பதே உங்கள் வேலை என்று காட்டிக் கொண்டால் பின்னர் ஊரார் பிரச்னைகளுக்கெல்லாம் நீங்கள் சுமைதாங்கி ஆகிவிடுவீர்கள்.
"நீங்கள் மற்றவர்க்கு உதவி செய்வது அப்புறம் இருக்கட்டும்; முதலில் என் பிரச்னையை முடித்துக் கொடுங்கள்" என்ற உங்களை ஆளுக்கு ஆள் ஒவ்வொருபக்கம் இழுப்பார்கள்.
அவர்கள் இழுத்த இழுப்பில் நீங்கள் தீர்ந்து போய் விடுவீர்கள். நீங்கள் உதவுகிற பண்பாளர் என்பதோடு, உங்களை யாரும் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முன் வந்தால், அதற்கு இடம் கொடுக்க மாட்டீர்கள், முக தாட்சண்யம் பார்க்காமல் கோபப்படுவீர்கள் என்றும் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவும் ஒரு நற்பண்பே. ஆகவே நல்லவருக்கு மட்டும் நல்லவராக இருங்கள்.