தேவையில்லாத ஆணி... தேவையான பாடம் - ஒரு வாலிபனின் மறுபிறவி கதை!

மற்றவர் சண்டையில் தேவையில்லாமல் தலையிட்ட வீரன், பாறை கீழ் விரல்கள் சிக்கி புலி முன் மரண அச்சத்தைச் சந்தித்த கதை.
Motivational Story | A man in the forest
Motivational Story | A man in the forestCredit: AI Image
Updated on

ஒருவருக்குப் பிரச்னை இருக்கிறது என்று தெரியும் போது, அதைப் பற்றி விசாரிப்பதில் தவறில்லை. ஆனால், எப்போது அது நமக்குத் தேவையில்லாத பிரச்னை என்று தெரிகிறதோ, அப்போதே அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இதைப் புரிய வைக்க ஒரு குட்டிக் கதையைப் பார்க்கலாம்.

ஒரு ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். அவன் மிகப்பெரிய பலசாலியாகவும் வீரனாகவும் இருந்தான். ஆனால், அவனுக்கு எங்கு எந்தப் பிரச்னை நடந்தாலும், அதில் மூக்கை நுழைக்கும் பழக்கம் இருந்தது. இப்படியிருக்கையில், ஒரு நாள் அந்த வீரன் காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே இரண்டு பேர் ஒரு மரத்திற்கு அருகில் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்ததும் அந்த வீரனுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. "எதற்காக சண்டை போடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் சென்று கேட்டான்.

உடனே அவர்கள் கூறினார்கள்: "இங்கு இருக்கும் இந்தப் பெரிய பாறையை நகர்த்த முடியாது என்று நான் சொன்னேன். இல்லை, நம் ஊரில் இந்தப் பெரிய பாறையை நகர்த்தக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள் என்று இவன் சொல்கிறான். இதில் யார் சொல்வது சரி? நீங்களே சொல்லுங்கள்," என்று கேட்டனர்.

அதைக் கேட்ட வீரனுக்கு, தானே பெரிய வீரன், தன்னிடம் இப்படி கேட்கிறார்களே என்று தோன்றியது. "ஏன் நகர்த்த முடியாது? நானே பெரிய வீரன் தான், என்னால் நகர்த்த முடியும்," என்று சொல்லிக் கொண்டே அந்தப் பாறையை நகர்த்த முயற்சித்தான். அப்போதுதான் தெரிகிறது, அந்தப் பாறை பெரிய மர வேர்களுக்குள் நன்றாக மாட்டியிருக்கிறது என்று!

இருப்பினும், அந்த வீரன் பாறையைத் தீவிரமாக நகர்த்த முயற்சித்த போது, அவனுடைய விரல்கள் பாறைக்குக் கீழே மரவேர்களுடன் சேர்த்து மாட்டிக்கொள்கின்றன. இப்போது அந்த வீரனால் தன் கைகளை அசைக்கவே முடியவில்லை. சரியாக இந்தச் சமயம் பார்த்து, அந்தக் காட்டிற்குள் புலி உருமும் சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டதும் சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து ஓடிவிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
'நான் இல்லனா எதுவும் நடக்காது' - இந்த எண்ணம் ஆபத்தானதா?
Motivational Story | A man in the forest

இப்போது நினைத்தாலும் அந்த வீரனால் ஓட முடியாது; அவனுடைய விரல்கள் நன்றாகப் பாறையின் அடியிலே மாட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில்தான் அந்த வீரன் நினைக்கிறான், "தேவையில்லாமல் மற்றவர்கள் பிரச்னையில் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால், இந்த நிலை நமக்கு வந்திருக்காது," என்று.

இது போலத்தான், ஒருவருக்கு ஏதேனும் பிரச்னை வரும் போது அதை வேடிக்கை பார்க்கச் சொல்லவில்லை; ஆனால், எப்போது அது நமக்குத் தேவையில்லாத பிரச்னை என்று தெரிகிறதோ, அப்போதே விலகிவிட வேண்டும். அதைவிட்டுவிட்டு அதில் போய் மூக்கை நுழைத்தால், அது நம்மை இன்னும் பெரிய பிரச்னையில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com