
'கடலில் நீங்கள் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி உலகத்துக்கு அக்கறையில்லை. கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா? என்பதுதான் முக்கியம்'- இது மேல்நாட்டு அறிஞர் எஃப்ஜி என்பாரின் கருத்து.
தோற்று இருந்தால் எதனால் தோற்றீர்கள் யாரும் கேட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை. நீங்கள் வென்றீர்களா? இல்லையா? என்பதுதான் கேள்வி, நம்மவர்கள் எதிலும் நொண்டிச்சாக்கு சொல்வதில் வல்லவர்கள் அந்த வழக்கம் சமாதானத்துக்கு உதவுமே தவிர வெற்றிபெற உதவாது.
கடுமையாக உழைத்து முன்னேற விரும்புகிறவன் எப்படியும் ஜெயித்தே தீருவது என்ற எண்ணமுள்ளவன் இப்படிப் பேச மாட்டான்.
ஒரு வேலையில் மனம் லயித்து, சுயதேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, செயலாற்று கிறவனுக்கு ஒருபோதும் தோல்வி ஏற்பட வழியே இல்லை.
அதை விட்டு விட்டு 'அட இதென்னடா தொந்தரவாப் போச்சு' என்று எண்ணத்திலோ, பிறர் சொல்கிறார்களே என்பதற்காகவோ எதையேனும் செய்தால் அதில் மனம் பதியாது; சிதறத்தான் செய்யும்; காரியம் கைமீறிப் போகும்.
எப்போதும் எதையும் முழு விருப்பத்தோடு, இது என்வேலை, சரியாக முடிந்தால் நன்மை நமக்குத்தான் என்று ஆர்வத்தோடு செய்தல் வேண்டும். அந்த வேலையை வெற்றிகரமாக முடிப்பதால் கிடைக்கப் போகும் ஆதாயம். பாராட்டுகளை எண்ணிப்பார்த்து மகிழ்வோடு செய்யவேண்டும்.
அப்போதுதான் வெற்றி உறுதிப்படும், கடினமான வேலை சுலபமாய்த் தெரியும். இல்லாவிட்டால் எந்த வேலையும் கூட பெரும் சுமையாகத் தோன்றும்.
உங்கள் வேலையில் கோளாறு வந்தால் அதை அடுத்தவர் பக்கம் திருப்புவதைவிட்டு திருத்தம் செய்ய வேண்டும். நமது தவறை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒப்புக்கொள்ள மறுத்து உதறினால் பல சிக்கல்கள் வரநேரிடும். நமது தவறை நாமே ஏற்கும் போதுதான் அதை திருத்தி அமைக்கவே முடியும். அடுத்த தடவையாவது முறையாக கையாள முடியும். இல்லையேல் உடன் இருப்பவர்களோடு சண்டையும் சச்சரவும்தான் வரும்; பிரச்னைதான் பெருகும்.
இதனால் மற்றவர்களின் ஒத்துழைப்பு தடைபடுவதோடு. உங்களது தவறை திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.. அடுத்த முயற்சிக்கான சாத்தியக் கூறுகள் அடிபட்டுவிடும். எனவே தவறு உங்களது என்று தெரிந்த பின்னால் அதை அடுத்தவர்கள் தலையில்சுமத்திவிட்டு நழுவ முயலாதீர்கள்; பிரச்னையில் இருந்து ஒதுங்கி ஓட முயலாதீர்கள்.
அந்தப் பிரச்னை உங்களை துரத்தி வருமே தவிர தப்பிக்க விடாது. அதனால் கூடுமானவரை தவறு நம்முடையது என்று தெரிந்தபின் மன்னிப்பு கேட்பதாய் இருந்தால் கூட பரவாயில்லை, கேட்டு விடுங்கள்.
அப்பொழுதுதான் மற்றவர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் ஆளாக முடியும், தவறை திருத்திக் கொள்ள உதவிக்கு வருவார்கள், சிக்கலாய் இருந்தால் மீள வழிகாட்டுவார்கள்; தெரியாததை கற்றுத் தரவும், புரியாததை சொல்லிக் கொடுக்கவும் முன் வருவார்கள்.
அவைதான் உங்களை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் வளர்ச்சிக்கு வழிகோலும்.
தவறு செய்யாதவர் யார் இருக்கிறார்கள். தவறு நிகழ்வது சகஜம். அதை திருத்தி அமைப்பதே அறிவுடைமையாகும்.