
பொய் என்பது உண்மையுடன் போட்டி போட்டு கடைசியில் தோற்றுப் போய்விடும். பொய்யை தோற்கடிக்கும் வல்லமை உண்மைக்கு இருப்பதால் பொய் கடைசியில் தோற்றுத்தான் போகும். பொய் தன் எதிரியான உண்மையைப்போல் தன்னைக் காட்டிக் கொள்வதற்காக அதிக சாட்சிகளை சேர்க்கிறது.
பொய்யை மறைக்க பலப்பல பொய்கள் தேவைப்படுகின்றது. பொய் என்பது "பொய்மையும் வாய்மையுடைத்து புரை தீர்க்கும் நன்மை பயக்கும் எனில் வள்ளுவரின் கூற்றுப்படி நாம் கூறும் பொய்யால் நன்மை விளையும் என்று அறிந்தால் மட்டுமே பொய் சொல்லலாம்.
சிறுவயதில் நாம் பொய் சொல்லாமல் இருப்பதற்காக பெரியவர்கள் பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் என்று பயமுறுத்தி இருப்பார்கள். பொய் சொல்வதால் நிறைய சிக்கல்கள் உருவாகும். நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது என்பதற்கு காரணம் ஒரு பொய் சொல்ல ஆரம்பித்தால் அதை மறைக்க மற்றொரு பொய் சொல்ல வேண்டி இருக்கும். அதை மறைக்க மற்றொரு பொய் சொல்ல வேண்டும் இப்படி அடுக்கடுக்காக நிறைய பொய்கள் சொல்ல வேண்டிவரும்.
அத்துடன் நாம் சொன்ன பொய்கள் அத்தனையையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தவறாக மாற்றி சொல்லி மாட்டிக்கொள்வோம். ஞாபகம் வைத்துக் கொள்வது ரொம்ப கடினம். எனவே பேசாமல் உண்மையைப் பேசி விட்டு போகலாமே!
நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது என்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம் உண்மையை எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் ஒருநாள் கண்டிப்பாக வெளிவந்துவிடும். அன்று நாம் சொன்னது பொய் என்பது தெரியும் பொழுது நிறைய அவமானப்பட வேண்டிவரும். அதற்குப் பிறகு நாம் எதைச் சொன்னாலும் மற்றவர்கள் நம்ப தயங்குவார்கள். நம்மேல் நம்பிக்கை போய்விடும். நாம் சொன்னது பொய் என்பது தெரிந்ததும் நமக்கிருந்த மரியாதை காற்றில் பறந்துவிடும். பொய் பேசுவதால் சமூகத்தில் மதிப்பிருக்காது.
அதற்காக நம்மால் 100% பொய் சொல்லாமல் வாழ முடியாது என்பதே உண்மை. கூடியவரை உண்மையை பேசவேண்டும். நாம் பொய் சொல்வதால் பிறருக்கு நன்மை பயக்கும் எனில் ஓரிரு பொய் சொல்வதில் தவறில்லை. கூடியவரை உண்மையே பேசவும். உண்மையை சொல்ல முடியாத இக்கட்டான தருணங்களில் மௌனம் காத்தல் சிறந்தது. உண்மை பேசுவது மனதிற்கு திருப்தியைத் தரும். நிம்மதியை கொடுக்கும். உண்மையே பேசிப் பழகுவோம்.
பொதுவாக ஒருவர் பொய் சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சில நியாயமானவையாக இருக்கலாம். சில பொய்கள் குற்றங்களை மறைப்பதற்காக கூறுவதாக இருக்கலாம். உண்மையைச் சொன்னால் சம்பந்தப்பட்டவர் கோபப்படலாம், புரிந்து கொள்ளாமல் போகலாம் அல்லது பிரச்னையை மேலும் சிக்கலாக்கலாம், மன்னிக்க தயாராக இல்லாதவராக இருக்கலாம்.
இதுபோன்ற சூழ்நிலைகள்தான் பொய் சொல்ல தூண்டுபவை. இதற்கு முக்கியமாக கோபப்படாமல் என்ன நடந்தது என்பதை காது கொடுத்து கேட்பவராக எதிர் தரப்பினர் இருக்க வேண்டும். சொல்லவரும் விஷயத்தை புரிந்து கொள்பவராகவும், தவறு இருந்தால் மன்னித்து அதை திரும்ப செய்யாமல் இருக்க தகுந்த அறிவுரை கூறுபவராகவும் இருந்தால் பொய் கூற வேண்டிய தேவை இல்லாமல் போகும்.