சிலர் எத்தனை சோதனை வந்தாலும் இதையும் கடந்து விடுவோம். கடவுள் நமக்கு அந்த பலத்தை தந்திருக்கிறார் என்பார்கள் நம்பிக்கையுடன். எண்ணம் போல வாழ்வு என்பார்கள். அந்த நம்பிக்கை இருப்பவர்கள் எந்த கஷ்டத்தையும் எதிர்நோக்கி எதிர்நீச்சல் போட்டு கடந்து விடுவார்கள்.
சிலர் வீட்டில் மளிகைப் பொருட்கள் காலியாகிவிட்டால் அந்த பொருள் இல்லை என்று கூறாமல் அந்த பொருள் வாங்க வேண்டும் என்பார்கள். இல்லை என்ற வார்த்தை எதிர்மறை அலையை உருவாக்கும் என்பதாலோ என்னவோ இல்லை என்று சொல்லாமல் வாங்க வேண்டும் என்பார்கள்.
தோழி ஒருத்தி பழக்காரர் வந்தால் இல்லை வேண்டாம் என்று கூற மாட்டாள். நாளை வாங்கிக் கொள்கிறேன் என்பாள். இல்லை வேண்டாம் என்று எதற்கு முகத்தில் அடித்தால் போல் சொல்ல வேண்டும் நாளை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வது நல்லது என்பாள்.
எண்ணியது நல்லதாக இருக்கும் பட்சத்தில் நடப்பதும் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கைதான். சில சமயங்களில் நாம் நினைக்க நடப்பது வேறொன்றாக இருக்கும். அதுவும் நல்லதிற்கே என்ற மனப்பக்குவம் வர வேண்டும்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப்பெரின்.
நம்பிக்கையோடு மனதில் எண்ணிய காரியத்தை செய்தால் எண்ணியபடி நடக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை. இந்த பக்குவம் அவ்வளவு எளிதில் வந்து விடாது.
தோல்வியை கண்டிராதவர் காண்பது அரிது. அந்த தோல்வியிலிருந்து நாம் என்ன தவறு செய்திருக்கிறோம் என்று தெரிய வரும். அந்த தவறை திருத்திக் கொள்ளலாம். தோல்வியும் நமக்கு பல படிப்பினைகள் கற்றுத் தருகின்றன.
நேர்மறை சிந்தனை வளர்க்க முயற்சி செய்வோம். நேர்மறை சொல்லுக்கு அதிக ஆற்றல் இருக்கிறது. அதனால்தான் வாழ்க வளமுடன் என்று மற்றவரை வாழ்த்துவது பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியிருக்கிறார். நேர்மறை எண்ணங்களை முதலில் நம் மனதுக்குள் விதைக்க கற்றுக் கொள்வோம். நல்லது நடக்கும். நல்லதே நடக்கும்.
ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் என்று நினைத்துதான் ஆரம்பிக்க வேண்டும். நடக்காமல் போய் விட்டு ஏமாற்றமாகி விடுமோ என்று நினைத்தால் அதுவும் நடக்கலாம். பிறகு ஏமாற்றத்தினால் மனம் துவண்டு எடுத்த வேலையை செய்து முடிக்க முடியாமல் போய்விடும்
தோல்வி வராது என்று கூற முடியாது. அதுவும் நல்லதுக்குதான் என்று எண்ணி முயற்சியை கைவிடாது தொடர வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு கற்றுத் தரும். அதை புரிந்து கொண்டால் எண்ணியது கண்டிப்பாக நடக்கும்.