
மகிழ்ச்சியின் இருப்பிடம் எங்கே இருக்கிறது? அது மனம்தான். மகிழ்ச்சியாக வாழத்தெரிந்தவர்களை துக்கம் அணுகுவதில்லை. மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை. அதனால் அதை எவரும் கற்றுக் கொண்டு விடமுடியும்.
மகிழ்ச்சி என்பது சூழ்நிலைகளில் இல்லை; நம்முடைய மனதில் தான் இருக்கிறது. சூழ்நிலையினை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே மகிழ்ச்சி ஏற்படுகிறது.
வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று ஏற்றுக்கொண்டால் அது மகிழ்ச்சியானதாகவே இருக்கும்; துயரம் நிரம்பியது என எண்ணினால் துயரமாகவேதான் இருக்கும். இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையாமல் இல்லாததை நினைத்து கவலைப்பட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியிருக்காது; மலர்ச்சியும் இருக்காது.
எந்த ஒரு மனிதனும் உலகத்தில் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. எவ்வளவு பணமிருந்தாலும், வசதிகள் இருந்தாலும் அவர்களிடமும் ஏதோசில குறைகள் இருக்கத்தான் செய்யும். இல்லாததை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் துக்கம்தான் மிஞ்சும்.
தோட்டத்தில் அழகான மலர்கள் பூத்திருக்கின்றன. அதை நாம் கவனிக்காமலும் செல்லலாம். அல்லது அந்தப் பூக்களின் அழகைப் பார்த்து ரசித்து மகிழ்ச்சியும் அடையலாம். அல்லது பார்த்த பிறகு எந்த ரசனை உணர்வும் இல்லாமல் சும்மாவும் இருக்கலாம். இந்த மூன்று நிலைகளையும் யோசித்துப் பாருங்கள்.
பூக்களை ரசிப்பது ஒரு மனநிலை. இந்த மனநிலை ஏற்படாமல் மகிழ்ச்சி ஏற்பட முடியாது. ஆக மகிழ்ச்சி என்பது நம்மைச் சுற்றி என்னத இருக்கிறது... என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்து இல்லை. அதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே மகிழ்ச்சி உண்டாகிறது.
எனவே மகிழ்ச்சி பார்க்கின்ற பொருளில் இல்லை; அந்தப் பொருளை நாம் பார்க்கின்ற மனநிலையினை பொருத்தே உருவாகிறது.
நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் எல்லையில்லாத அழகை சிந்திப்பதன் மூலம் மனதை மகிழ்ச்சியான நிலையில் எப்போதும் நாம் வைத்திருக்க முடியும்.
அதனால்தான் கலைகளை ரசிக்கக் கற்றுக்கொள்வது அவசியமாகிறது. இனிய சங்கீதத்தைக் கேட்கும்போதும், நல்ல ஓவியங்களைப் பார்க்கும் போதும், சிற்ப அழகில் மனம் லயிக்கும் போதும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நல்ல இலக்கியங்களைப் படிப்பதும் இதற்காகத்தான்.
அழகுள்ள பொருட்கள் என்றுமே இன்பம் பயப்பவை எனச் சொன்னான் ஓர் ஆங்கிலக் கவிஞன்.
வாழ்க்கையில் குறிக்கோளை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக உழைக்கின்றபோது அந்த உழைப்பிலேயே இன்பம் தோன்ற ஆரம்பிக்கும்.
எதைச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது நீங்கள் செய்கின்ற வேலையின் சுமை உங்களுக்குத் தெரியாது. மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பழகிக்கொண்டு விட்டால் வாழ்க்கை சுகமான அனுபவமாகிவிடும்.
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை என்பதால் அதை நாமாகவே உருவாக்கிக் கொள்ள முடியும். மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது கடுமையான உழைப்பு நமக்குச் சாத்தியமாகிறது. கடுமையான உழைப்பு உரிய பலன்களைக் கொடுத்து, முன்னேற்றப் பாதையின் கதவுகளைத் திறந்து விடுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் மனத்தை நிறுத்தி, அதில் மகிழ்ச்சி என்னும் தேனை சொரிய விடுவதுதான் நமது வாழ்க்கையின் குறிக்கோள்.