
உடலில் ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் உள்ளத்தில் ஏற்படும் காயம் ஆறுவதில்லை. உடலில் காயம் ஏற்படும்போது அதன் உபாதைகளை தெரிந்து மருந்து போட்டு காயத்தை ஆற்றி விடுகின்றோம். ஆனால் மனத்தில் ஏற்பட்டுவிடும் காயத்தை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை.
சிலர் சூழ்நிலையின் காரணமாக மோசமான சந்தர்ப்பங்களில் பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள், பின் நாளில் பெரும் அறிஞராகவும். மேதையாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
ஹெலன் கெல்லர் என்பவர் ஒண்ணரை வயது குழந்தையாக இருந்த போது விபத்தின் காரணமாக தன்னுடைய கண்குருடானது. காது செவிடானது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட அந்தக் குறைபாட்டை பெரிதுப்படுத்தாமல் வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு வெற்றியும் கண்டு, உலக சிந்தனையாளர்களுள் இவரும் ஒருவராகத் தன்னை மேம்படுத்திக் கொண்டார். பின்னர் பல புத்தகங்களையும் அவர் எழுதினார்.
உடல் காயம் அடைந்த போதும் உள்ளம் காயம் அடையாமல் உறுதியாக இருந்து, வாழ்க்கையில் வெற்றியடைந்து, மகத்தான சாதனைக் கனியைப் பறித்தாரென்றால் ஹெலன் கெல்லரின் மனம் ஆரோக்கிய இருந்ததே அதற்குக் காரணம்.
உள்ளத்தையும், வார்த்தைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரியாத அரசியல்வாதிகள் எத்தனையோ பேர்கள் அடுத்த தேர்தலிலேயே வெற்றி பெறாமல் போனதுண்டு. இருக்கும் இடங்கூடத் தெரியவில்லை.
மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதன் சுகமான வாழ்க்கை நடத்த முடியும். மனமும் உடலும் ஒன்று சேர்ந்து உழைக்கும் போதுதான் மாபெரும் வெற்றிக்கு தன்னை தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் திறமை வளர்கிறது.
தேசப்பிதாவாகிய மகாத்மா காந்தியடிகள், 'பசியால் வாடும் மனிதனுக்குப் பரமன் ரொட்டித்துண்டு ரூபத்தில் காட்சியளிப்பான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்து மதத்தின் பெருமைகளையும், கலாச்சாரத்தையும் அமெரிக்க மக்களுக்குச் சொற்பொழிவு ஆற்றிய சுவாமி விவேகானந்தர், "எங்களுடைய மக்களுக்கு இன்றைய தேவையெல்லாம் மத உபதேசமல்ல, அவர்களுடைய பட்டினியைப் போக்கும் உணவு ஒன்றுதான்" என்று குறிப்பிட்டார்கள்.
பட்டினியால் வாடும் மக்களின் மனம் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்க முடியும்? அந்த வேளையில் அறிவுரை, உபதேசம் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி என்பதை. இரண்டு மகான்களும் எவ்வளவு தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மக்களுக்கெல்லாம்' என்ற பாரதியாரும், முதலில் மக்களுக்கு வயிற்றுக்கு உணவைக் கொடுங்கள். பின்னால் கல்வியை பயிற்றுவிங்கள் என்றார்.
அவ்வைப்பாட்டியும், 'பசிவந்திடப் பத்தும் பறந்துபோகும் என்றார்.
ஆகவே, எந்த ஒரு மனிதனும் பசியால் வாடும்போது, அவனுடைய மனம் ஆரோக்கியமாக இருக்க முடியாது. தேக நலமும், பணமும் திறமையும் மட்டுமே ஒருவனுக்கு ஆரோக்கியம் என்று நினைப்பது தவறு. வறுமையில் வாடிய பலபேர் இன்று வளமையோடு வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனத்தில் காயம் இல்லாதவாறு பார்த்துக் கொண்டு திட நம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேறி ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆவார்கள்.
ஆகவே, சந்தோஷத்தையும், சஞ்சலத்தையும் ஒன்றென நினைத்து, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்து அதற்கேற்றாற்போல் மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நிலையைத்தான் ஆரோக்கியமான மனம் என்று சொல்லலாம்.
ஆரோக்கியமான மனத்தைப் பெறத்தான் நாம் முயலவேண்டும். இதில்தான் வாழ்க்கையின் தத்துவமே அடங்கி உள்ளது.