
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல். சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்… எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காது? கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காது? அர்த்தமுள்ள வரிகள். எது நடக்கிறதோ அது நடந்துதான் ஆகும் என்று எதையும் விட்டுவிட முடியாது. வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரமே தனிதான்.
அவர்களின் மதிப்பு உயரும். என்னடா இது வாழ்க்கை என்று அலுத்து கொள்பவர்களுக்கு வாழ்க்கை போர் அடிக்கத்தான் செய்யும். எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று துணிந்து நிற்பவர்கள் வாழ்வில் முன்னேறி சென்று கொண்டே இருப்பார்கள்.
பிரச்னை என்பது ஓடும் ஆறுபோல. அதில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற தன்னம்பிக்கை மற்றும் அயராத உழைப்பு வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாழ்வில் தேடல் என்பது மிகவும் அவசியம். எதைத் தேடிப் போகிறோம், எதுவரை போகிறோம், அதனால் அடையப்போவது என்ன என்பதில் தெளிவும், புரிதலும் அவசியம். ரிஸ்க் எடுக்க வேண்டாம். வாழ்க்கை எப்படி போகின்றதோ அதன் போக்கிலேயே வாழ்ந்து விட்டு போய்விடலாம் என்று நினைத்து வாழ்க்கையை ஓட்டுவதில் எந்தவிதமான சுவாரசியமும் இருக்காது. வாழ்வில் அடிபட்டு எதிர்நீச்சல் போட்டு கற்றுக்கொள்ளும் அனுபவ பாடம்தான் என்றும் உதவியாக இருக்கும்.
தினசரி வாழ்வில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். அனைத்தும் விதிப்படிதான் நடக்கிறது என்றால் ஏன் முயற்சி செய்யவேண்டும். சும்மா இருந்து சுகம் காணலாமே! வாழ்வில் மேலும் மேலும் உயர, நல்ல நிலையை அடைய எதிர்ப்படும் இன்னல்களை எதிர்நீச்சல் போட்டு கடந்துதான் வரவேண்டும். வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி நிறைந்தது. அது அவரவர் எடுக்கும் முயற்சி, அவர்களுக்குள் இருக்கும் திறமை, உழைப்பு போன்ற பல விஷயங்களை சார்ந்தது.
உலகில் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவ ராசிகளும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் எதிர்நீச்சல் போட்டுதான் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீரில் உயிர்வாழ அதைவிட பெரிய மீன்களுடன் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். எலிகள் வீட்டில் உலா வர பூனையுடன் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். மான்களோ காட்டில் வாழ்வதற்கு சிங்கத்துடன் சதாசர்வ காலமும் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். மானை வேட்டையாட சிங்கம் மெல்ல பதுங்கி வருவதும், அதை உணர்ந்த மான் தன்னுடைய ஓட்டத்தை தொடங்கி ஓட ஆரம்பிக்கும்.
தன்னால் இயன்ற வரை, கடைசிவரை தன்னுடைய போராட்டத்தை விடாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் அவை சிங்கத்திடம் சிக்கிக் கொள்ளும். சில நேரங்களிலோ தப்பிக்கவும் செய்யும். இப்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தங்களையும், தங்கள் இருப்பிடத்தையும் தக்க வைத்துக்கொள்ள எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் இருக்கும்.
சிலர் சின்ன சின்ன பிரச்னைகளுக்கு கூட சோர்ந்து போய் விடுவதும், அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவிப்பதுமாக இருப்பார்கள். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு போராட பிரச்னைகள் நம்மை கண்டு பயந்து ஓடிவிடும். எதையும் முயற்சி செய்து போராட கற்றுக்கொள்ள வேண்டும்.
வந்தால் வெற்றி. இல்லையென்றால் அது ஒரு அனுபவமாக இருந்துவிட்டு போகட்டும்! முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் நம்மை சிறை பிடிக்கும் என்பதை மறக்க வேண்டாம்! விரக்தியில் விடியல் கிடைத்ததாய் சரித்திரம் இல்லை. விடாது துரத்தி எதிர்நீச்சல் போட்டால்தான் விடியல் பிறக்கும்!