
தினமும் காலையில் தூக்கத்திலிருந்து கண் விழித்ததும், 'இந்த நாள் இனிய நாளாகப் போகணும். செய்யும் வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடியணும்' என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு மேற்கொண்டு வேலைகளை ஆரம்பிப்போம். அதனுடன், நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டு சில உறுதிமொழிகளையும் எடுத்துக்கொண்டால் அந்த நாள் உண்மையிலேயே ஓர் உன்னதமான நாளாக அமைந்துவிடும். அதற்காக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய 8 உறுதிமொழிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.என் இலக்கை அடைய என்னால் முடியும்: இந்த உறுதிமொழியை ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொள்ளும்போது வெற்றியை அடைவதற்கான நம்பிக்கையும் பலமும் உங்களுக்குள் உண்டாகும். அதன் மூலம் எந்த சவாலையும் ஏற்றுக்கொள்ள தைரியம் பிறக்கும்.
2.பிறரின் அன்பைப் பெறவும் வாழ்க்கையில் வெற்றியடையவும் எனக்குத் தகுதி உள்ளது: இந்த உறுதிமொழியை சொல்லிக்கொள்ளும்போது, தனிப்பட்ட சந்தோஷம் மற்றும் வெற்றி உள்ளிட்ட, வாழ்க்கை உங்களுக்காகத் தர வைத்திருக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பெற நீங்கள் தகுதியானவர்தான் என்ற உணர்வு உள்ளுக்குள் பீறியெழும்.
3.எனக்குள் நேர்மறை எண்ணங்களும் நம்பிக்கையும் பிரகாசமாய் ஒளிர்கிறது: இதைக் கூறிக்கொள்வதால் அந்த நாள் முழுக்கத் தேவையான நேர்மறை சக்தி உங்களுக்குள் பெருகிப் பரவும். அப்போது கடினமான எந்த வேலையையும் ஏற்று நம்பிக்கையான மனோதிடத்துடன் செய்து முடிக்க தைரியம் வரும்.
4.எனது உள்ளுணர்வு கூறுவதையும் எனது திறமைகளையும் நான் நம்புகிறேன்: உங்களுடைய அறிவாற்றல் மற்றும் உள்ளுணர்வுகள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே உங்களின் தன்னம்பிக்கை வளர்வதற்கான அடித்தளத்தை உருவாக்கும்.
5.வளர்ச்சியடைவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சவாலாக ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்: சவால்களை சந்திப்பதில் உண்டாகும் தடைகளைக் கண்டு பயந்து ஒதுங்காமல், வாழ்க்கையில் முன்னேறவும் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடையவும் கிடைத்த சந்தர்ப்பமாக எண்ணி துணிவுடன் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற இந்த உறுதிமொழி உதவும்.
6.என்னுடைய உணர்ச்சிகளும் எண்ணங்களும்
எனது கட்டுப்பாட்டிற்குள் உள்ளன: உங்கள் மனநிலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்து அந்த நாளில் எது நடந்தாலும் கவலைகொள்ளாமல் அமைதியுடனும் தெளிவாகவும் அந்த புதிய தொடக்கத்தை எதிர்கொள்ள இந்த உறுதிமொழி பயன்படும்.
7.நான் என் மீதும் எனது கனவுகள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்: உங்களின் ஆக்கபூர்வமான அறிவாற்றல் மற்றும் திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து செயல் புரிவது மிக முக்கியமானதொன்று. இந்த உறுதிமொழி உங்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட கனவுகளை நனவாக்க பயமின்றி திட்டமிடவும் செயலாற்றவும் உங்களை சிறந்த முறையில் ஊக்குவிக்கும்.
8.இந்தப் புதிய நாள் மற்றும் அது தரவிருக்கும் புதிய சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை நன்றியுடன் எதிர்நோக்குகிறேன்: நன்றியுணர்வு வாழ்க்கை உங்களுக்கு அளிக்கும் நல்ல விஷயங்கள் மீது கவனம் செலுத்த உதவும். இதனால் உங்கள் இதயம் இன்பத்தில் மூழ்கும். மேலும் ஒவ்வொரு நாளையும் ரசித்து அனுபவிக்க உங்களுக்கு ஊக்கம் தரும்.
மேற்கூறிய எட்டு உறுதிமொழிகளை கூறி நேர்மறை எண்ணங்களோடு நாளைத் துவக்குவது நமக்கு ஊக்கம் தந்து, தன்னம்பிக்கை மற்றும் ஈடுபாட்டுடன் செயலாற்ற உதவி புரியும்.