உண்மை யாருக்கும் அஞ்சாது. நேர்மை யாருக்கும் அடங்காது!

Truth fears no one!
Lifestyle articles
Published on

ண்மை யாருக்கும் அஞ்சாது, நேர்மை யாருக்கும் அடங்காது என்பார்கள். உண்மை என்பது வாய்மை, நேர்மை என பல பொருள்களில் அறியப்படுகிறது. வாய்மை என்பது உள்ளத்தில் உள்ளதை மாறாமல் வாய் வழியாக பேசுவது. அதாவது பிறருக்கு எந்த வித தீங்கும் இல்லாத சொற்களை சொல்வதே வாய்மை. நேர்மை என்பது சொன்ன சொல் மாறாமல் இருப்பது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவது. உண்மையாக இருந்தால் நாம் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. நேர்மையாக நடந்து கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியாக நலமுடன் இருக்கும். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை அனைவரும் அறிவோம். நன்மை செய்தால் நன்மையும், தீமை செய்தால் தீமையும் நடக்கும்.

நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பவர்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. எப்போதும் உண்மையே பேசுவதால் அடுத்து என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று அடுக்கடுக்காக பொய்களை சிந்திக்க வேண்டிய அவசியமும் இல்லை. பொய் சொல்லி சமாளிக்க நினைத்தால் சமூகத்தில் நம்முடைய மதிப்பும் மரியாதையும் நாளடைவில் போய்விடும். நேர்மையாக வாழ்வதில் சிரமங்கள் இருந்தாலும் மனம் அமைதியுடன் சந்தோஷமாக எந்தவித சலனமும் இன்றி இருக்கும்.

நேர்மையாக இருப்பதால் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு குறிப்பாக மனநிம்மதி கிடைக்கும். பேசுகின்ற வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். செல்லும் இடமெல்லாம் பாராட்டுக்கள் கிடைக்கும். அத்துடன் நாம் செய்கின்ற நேர்மையான செயல்களின் காரணமாக யாருக்கும் பயந்து வாழவேண்டிய அவசியமில்லை. இரவில் படுத்தவுடன் நல்ல உறக்கம் வரும். சமூகத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். தன்னம்பிக்கை வளரும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைவிட வாழ்க்கையில் நமக்கு வேறு என்ன வேண்டும்?

ஒவ்வொருவருமே நேர்மையாக இருப்பது நம் கடமை என்று எண்ண வேண்டும். சென்னை செம்பரம்பாக்கம் தண்ணீர் சூழ்ந்து மக்கள் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் குழந்தைக்கு பாலுக்காக திண்டாடிய நேரத்தில் அதை பார்த்துவிட்டு ஒருவர் தண்ணீரில் தத்தளித்தபடி வந்து இரண்டு பாக்கெட் பால் கொண்டு வந்து கொடுத்த பொழுது ஒன்று போதும் என்று சொல்லி நன்றியுடன் பெற்றுக் கொண்டதை பார்த்ததும் அந்த இக்கட்டான சமயத்திலும் நேர்மை இன்னும் சாகவில்லை என்று தோன்றியது. அதேபோல் எத்தனை ஆட்டோக்காரர்கள் நிஜ வாழ்விலும் பாட்ஷாவைப்போல் விட்டுப் போன பை, பணம், செல்போன்களை திருப்பிக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். இவையெல்லாம் இன்னும் நேர்மை சாகவில்லை என்பதையே காட்டுகிறது. நேர்மைக்கு என்றுமே மதிப்பு உண்டு. என்ன நேர்மையாக இருப்பவர்களை கொண்டாடத் தெரியவேண்டும் அவ்வளவுதான்!

இதையும் படியுங்கள்:
உணர்ச்சி வசப்படும்போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்!
Truth fears no one!

நேர்மையையும் உண்மையையும் கொண்டாடத் தெரியவில்லை என்றால் நேர்மையானவர்களும், நேர்மையும், உண்மையும் அரிதாகிக் கொண்டே வரும். எல்லோராலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக வாழ்ந்து விட முடியாது என்று கூறுவதுண்டு. அத்துடன் நேர்மையாக இருப்பவர்கள் எல்லாம் நன்றாக ஒன்றும் வாழ்ந்து விடவில்லை என்ற கருத்தும் உண்டு. நேர்மையாக இருப்பவர்களை சில சமயங்களில் நேர்மையாக வாழ விடுவதில்லை என்பதுதான் உண்மை. நேர்மையாக இருப்பவர்களிடம் பணம் காசு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்களிடம் இருக்கும் நிம்மதியான வாழ்க்கையும், சந்தோஷமும், மற்றவர்களின் நம்பிக்கையை எளிதில் சம்பாதிப்பதும் நேர்மையான மக்களிடம்  மட்டுமே காணப்படும் குணங்களாகும்.

சிலருக்கு நேர்மையற்ற வழியில் பாதிப்புக்குள்ளான பொழுதும், நேர்மை இல்லாத செய்கையால் புறக்கணிக்கப்படும் பொழுதும், தன்னுடைய தன்மானத்திற்கு பாதிப்பு ஏற்படும் சமயத்திலும்தான் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ‌‌ வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நேர்மையை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும்.

உண்மையை பேசுவோம்! நேர்மையாக வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com