
எந்தச் சட்டமும் ஒரு தனிமனிதனாலோ, ஒரு குழுவாலோதான் தீர்மானிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுதந்திரப் போராட்டம் என்பது நமக்கு சரியென்று தோன்றியது. அன்றைய அரசு இயந்திரம் அதைத் தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்ல, அதில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.
சரி என்றோ தவறு என்றோ எதுவும் இல்லை. புத்திசாலித்நனமாக செயல்படுவது, புத்தியின்றி செயல்படுவது என இருவகையாகத்தான் எந்தச் செயலையும் பிரிக்க முடியும். தன்னையோ பிறரையோ வருத்தும் செயல்களைச் செய்வது புத்திசாலித்தனம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டாலே குற்றங்கள் ஒழிந்துவிடும்.
குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களிடம் அற்புதமான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. ஆனால் அவர்களுக்குள் சந்தோஷம் இல்லாத ஒரே காரணத்தால் அதைத்தேடும் அவசரத்தில் தவறான பாதைக்கு மாறிவிடுகிறார்கள். நீங்களும் சந்தோஷத்தைத் தேடித்தான் செயல்களைப் புரிகிறீர்கள். ஆனால் விதியை மீறினால் என்ன ஆகும் என உங்களுக்குப் புரிந்திருக்கிறது. கணக்கு போட்டு வரிசையில் காத்திருக்கத் தயாராக இருக்கிறீர்கள். அவர்களுக்குக் காத்திருக்கத் தயாராக இல்லை. அவ்வளவுதான் வித்யாசம்.
ஓருவனுக்கு அழகான செகரடரி இருந்தார். ஒருமுறை அவளைத்தன் காரில் கொண்டுபோய் விட்டார். அன்று மாலை தன் மனைவியுடன் கடைத்தெருவுக்குச் சென்றபோது அவர் மனைவியின் இருக்கைக்குக் கீழ் ஒரு செருப்பு இருந்ததை கவனித்தார். செகரடரி விட்டுட்டுப் போய்விட்டாள் போலும் என்று நினைத்து அதை வெளியில் எறிந்து விட்டார்.
கடைத் தெருவில் இறங்கும் முன் மனைவி "என் புதுச் செருப்பில் ஒன்று காணோமே" என்று கத்தினாள். யார் இங்கே மோசம் இல்லை. அந்த நபரைப் போன்று உள்ளுக்குள் எத்தனை பேர் மோசமாக இருக்கிறார்கள். ஆனால் வெளியே போலியாக நடந்து கொள்கிறார்கள்.
உள்ளே அமைதியாக இருப்பதும், ஆனந்தமாக இருப்பதும்தான் இயல்பான நிலை. வெளியில் சந்தோஷம் தேடுவது அல்ல. இதை உணராத வரை ஒழுக்க நெறிகள் என்றைக்குமே வெற்றின பெறாது. இதற்கு நிரம்பி வரும் சிறைச்சாலைகளே சாட்சி.