
நம்மை பிசியாக வைத்துக் கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. சுறுசுறுப்பாக இருந்தாலே போதும். கருமமே கண்ணாக நம் காரியத்தில் குறியாக இருந்து செயல்பட்டால் நேரம் போவதே தெரியாது. எப்பவும் வாட் நெக்ஸ்ட்னு அடுத்தடுத்து என்ன என பார்த்துகிட்டே போயிடனும். அத்துடன் நம்மை பிஸியாக வைத்துக்கொள்ள எந்த செயலையும் நிதானமாக செய்யவேண்டும்.
புதுப்புது விஷயங்களை கற்றுக்கற்றுக்கொள்வது, உலகில் நடக்கும் பல விஷயங்களையும் அறிந்து கொள்வது என நேரம் ஓடுவதே தெரியாமல் நம்மை பிஸியாக்கிக் கொள்ளலாம்.
காலை எழுந்ததிலிருந்து இரவு வரை ஒரு ஷெட்யூல் வகுத்துக் கொள்ளவேண்டும். எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வகுத்துக்கொண்டால் நேரம் தவறாமல் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடிப்பதுடன் நம்மை எப்பொழுதும் பிஸியாக வைத்துக் கொள்ளலாம்.
முக்கியமாக ஆக்கபூர்வமான விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. பிசியாக வைத்துக் கொள்வதாக நினைத்து காலையிலிருந்து டிவி பார்ப்பது, வேண்டாத வெட்டி விஷயங்களில் கவனம் செலுத்துவது என்று நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களில் ஈடுபட வாழ்வில் முன்னேற முடியும்.
பிஸியாக வைத்துக் கொள்வதாக எண்ணி கட்டுப்பாடற்ற வாழ்வு வாழாமல், நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டு மனம் தறிகெட்டு ஓடாமல் நல்ல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதும், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை பின்பற்றுவதும் அவசியம்.
இப்படி செய்வதால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் மெல்ல மெல்ல வரத் தொடங்கும். பிசியாக இருப்பது என்பது நாம் செய்யும் வேலைகள், பணிகளில் ஈடுபட்டிருப்பதை குறிக்கும். இது முன்னேறுவது அல்லது இலக்குகளை அடைவதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சியாகக் கொள்ளலாம்.
எப்பொழுதும் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டு பிசியாக இருப்பது நம் சுயமதிப்பை அதிகரிக்கும். பிசியாக இருப்பது என்பதை சுறுசுறுப்பாக இருப்பதாக எடுத்துக் கொண்டால், பிசியாக இருப்பதுடன் நம்முடைய உற்பத்தி திறனையும், நேரத்தையும் புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் திறம்பட எதையும் சாதிக்க முடியும். எதை சாதிக்கிறோமோ அது உற்பத்தித்திறனை தீர்மானிக்கிறது. அதே போல் நம் நேரத்தை எப்படி செலவழிக்கிறோமோ அது நம் பிசியை தீர்மானிக்கிறது.
அதேசமயம் அதிக உழைப்பு மற்றும் சோர்வு நம்மை சமூக, குடும்ப வாழ்க்கையிலிருந்து அந்நியப் படுத்துவதாக உணர்வோம். வேலையிலும், வாழ்க்கையிலும் சமநிலையின்மை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே வேலையிலும் வாழ்க்கையிலும் சமநிலையைக் கொண்டு வர நேர மேலாண்மையை நிர்வகிக்க வேண்டும். அதிகப் பணிகள், பொறுப்புகள் என அதிக சுமையை ஏற்றுக் கொண்டு பிஸியாக வலம் வருவதும், உட்காரக்கூட நேரமில்லை என்று ஓடிக் கொண்டிருப்பதும் மனஅழுத்தத்தை அதிகரிக்கும்.
ஒரு தேனீயைப்போல பிசியாக, சுறுசுறுப்பாக, பரபரப்பாக இருப்பது என்பது ஒரு சிறந்த பணி நெறிமுறையை கொண்ட நபரை குறிக்கும். எப்படி தேனீக்கள் மகரந்தத்தை பெறுவதிலும், தேன் தயாரிப்பதிலும் மும்முரமாக இருக்கிறதோ அது போல் நாமும் நம்முடைய இலக்கை நோக்கி அயராது உழைக்க வாழ்வில் உன்னத நிலையை அடையலாம்.
நாம் செய்யும் செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு சுறுசுறுப்பாகவும், ஆற்றல்மிக்கவராகவும் இருக்கும் அதே சமயம் நேர மேலாண்மையையும் நிர்வகிக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.