முடியாததையும் முடித்துக் காட்டுவதில் உள்ளது வெற்றி!

motivation image
motivation imageImage credit - pixabay.com
Published on

புத்திசாலிகளாக இருந்தால்தான் வாழ்க்கையில் புதுமைகளை கண்டுபிடித்து வெற்றி அடைய முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள்.  பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த மதிப்பெண்களை பெறுபவர்கள் தான் பெரிய அதிகாரிகளாகவும் தலைவர்களாகவும் வர முடியும் என்றும் பலர் தப்பு கணக்கு போடுகிறார்கள். அது தவறான மனப்பான்மை.

"நான் பரிட்சையில் பல முறைகள் தவறி அதே வகுப்பில் மீண்டும் படித்து வந்திருக்கிறேன். பெரிய விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றலும் திறமையும் எனக்கு இல்லை பெரிய காரியங்களை என்னால் செய்ய முடியாது" என்று நினைத்து நம்பிக்கை இழந்து விடுவது தோல்வியையேத் தரும்.

பள்ளி பருவத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த போதிலும் பிற்காலத்தில் தங்களிடமுள்ள உந்து சக்தியால் மிகப்பெரியவர்களாக உயர்த்தி கொண்ட  சிலர் நம்மிடையே ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். முடியாது என்று நினைக்காமல் முடியாததையும் முடியும் என்று சாதித்துக் காட்டியவர்கள்தான் அவர்கள். உதாரணமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். தோற்றம் காரணமாக அவருக்கு வாய்ப்புத் தராதவர்கள் இன்று அவரை உச்சத்தில் அண்ணாந்து பார்க்கும் நிலையில் புகழ்பெற்று உள்ளார்.

ஃபீஸ்ட் மார்ஷல் வெல்லிங்டன் பிரபு புகழ்பெற்ற வாட்டர்லூ போரில் தன்னுடைய நாட்டிற்கு வெற்றியை வாங்கி கொடுத்து நாடே மதித்து போற்றும்படி மாபெரும் தேசிய வீரனாக தன்னை உயர்த்திக் கொண்டதை அறிவோம்.  அவருடைய இளமை பருவத்தில் எதற்கும் உபயோகப்படாதவன் என்று அவருடைய பெற்றோர்கள் உட்பட அனைவரும் அவரை தூற்றினார்கள். படிப்பில் தன் பையனுக்கு சிறிது கூட ஆர்வம் இல்லாததைக் கண்டு மனம் வருந்திய அவரின் தாய் "உன்னால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை நீ போர்ப்படையில் சேர்ந்து கொள்" என்று அறிவுரை வழங்கினார். அதை அடுத்து தன்னால் முடியாததை முடித்து காட்ட வேண்டும் என்று நினைத்து வெற்றி கண்டவர்தான் அவர்.

"நான் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். என்னால் எப்படி புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்க முடியும் எலக்ட்ரானிக் சாதனைகளை உருவாக்க முடியும்.?" என்பது போன்ற தாழ்வு மனப்பான்மைகள் வாழ்க்கையை தோல்வியில்தான் முடியும்.

பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் நல்ல பொழுதுபோக்கு வேலை ஒன்றை தொடர்ந்து செய்து புதுமைகளை கண்டுபிடித்த புகழ்பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு.

ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்த ஒருவர்தான் போட்டோ எடுக்கும் முறையை கண்டுபிடித்து போட்டோ கலையின் தந்தை என்று பெயர் எடுத்தார்.

ஒரு வங்கியில் குமாஸ்தாவாக பணிபுரிந்த ஒருவர் மின்சார சக்தியால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தார்.

வர்ணம் பூசும் வேலையை செய்து வந்த  சாதாரண தொழிலாளிதான் தந்தி அடிக்கும் முறையை கண்டுபிடித்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த தன் அருமை மகளை சாலையில் அதிக குலுக்கல் இல்லாமல் வண்டியில் அழைத்துச் செல்வதற்காக டாக்டர் ஒருவர் காற்றால் நிரப்பப்பட்ட ரப்பர் டயரை கண்டுபிடித்தார்.

காது கேட்காத குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் தொலைபேசியை கண்டுபிடித்தார்.

கவிதைகளை எழுதி வந்த ஒரு கவிஞர் தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

இவர்களெல்லாம் மற்றவர்களால் முடியாததை முயன்று முடித்துக் காட்டி உலகத்தில் நிலைத்த புகழையும் வெற்றியும் பெற்றவர்கள் ஆனார்கள்.

இதையும் படியுங்கள்:
வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!
motivation image

பீத்தோவன் என்ற பியோனோ இசைக்கலைஞர் பற்றி அனைவரும் அறிவோம். ஒரு பெரிய இசை விழாவில் அற்புதமாக பியோனோவை வாசித்தார். விழா முடிந்தவுடன் மக்கள் வெள்ளம் அவரை சூழ்ந்து கொண்டு அவருடைய கலைத்திறமையை பாராட்டியது. "ஐயா நீங்கள் சாதாரண மனிதர் அல்ல கடவுள் அருள் பெற்றவர்" என்று பலவிதமாக புகழ்ந்து கூறினார்கள்.

அப்போது அவர் "என்னிடம் மந்திர சக்தி எதுவும் இல்லை. கடந்த 40 வருடங்களாக தினமும் எட்டு மணி நேரமாக பயிற்சி செய்து இந்த திறமையை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்னைப் போன்று முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமான பயிற்சி செய்பவர்கள் அனைவரும் நல்ல கலைஞனாக உருவெடுக்க முடியும் என்றார்."

ஆம். ஒரு செயலை முடியாது என்று தயங்காமல் முடியும் என்று முன்னேறிச் சென்று முடித்துக் காட்டுபவர்களுக்கே வெற்றி கட்டுப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com