
இயற்கையின் அழகும், அதன் ஆற்றலும் எல்லை இல்லாதவை.
'வானத்தின் நிலவு; விண்மீன்கள்; மண்ணில் ஓங்கி நிற்கும் மலைகள், அவற்றில் இருந்து வீழும் அருவிகள்; வளைந்தோடும் ஆறுகள்: விளைந்து நிற்கும் மரம், செடி, கொடிகள்…
கண்ணதாசன் சொன்னதுபோல், நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நம்மை இதமாக வருடிச் செல்லும் தென்றல்...
பல நேரங்களில் நின்று ரசிக்க நேரமில்லாமல் நாம்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமே தவிர, இயற்கைத் தனது எழிலை என்றுமே இழப்பதில்லை.
இயற்கை அழகானது மட்டுமல்ல... நமக்கு ஆசிரியரும்கூட வீரியம் மிக்க ஒரு விதை, வேறு யாருமே சொல்லித்தர முடியாத ஒரு பாடத்தை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது.
ஒரு விதை அழுந்தி விழ, நல்ல மண்; உரிய அளவு நீர்; தேவையான அளவுக்கு சூரிய வெளிச்சம். இவை அனைத்தும் சரியாக அமையும்போது, அந்த விதை முளைவிட்டு எழுந்து நிற்கிறது.
முளையாக எழும் விதை, கிளை விடும் நேரத்தில் செய்முறை விளக்கமாக நமக்குப் பாடம் எடுக்கிறது!
பனை மரம், தென்னை மரம் போன்ற ஒரு சில மரங்கள், ஒரே கொம்பாக வளரும். ஆனால் பொதுவாக, எல்லா மரங்களும் வெவ்வேறு வடிவங்களில், பல்வேறு திசைகளில் தங்கள் கிளைகளை நீட்டியபடியே வளர்கின்றன.
சூரிய வெளிச்சம் தங்களுக்குப் போதுமான அளவுக்குக் கிடைக்காதபோது, வெளிச்சம் கிடைக்கும் திக்கு நோக்கியே அவைகள் தங்களது கிளைகளைப் பரப்புகின்றன. மரங்களே வளைந்தும் வளர்ந்து நிற்கின்றன.
கிளைகள் இல்லாமல் ஒரே கொம்பாக வளரும் பனை மரம் போன்றவையும், ஒரு கொம்பினை நட்டு வைத்ததைப்போல நேர்க் கோட்டில் வளர்வதில்லை. அந்த மரங்களும் தங்களுக்கானத் தேவையைத்தேடி வளைந்து நெளிந்துதான் வளர்கின்றன்.
மண்ணுக்கு மேலே, நம் கண்களுக்குத் தெரியும் வளர்ச்சி இப்படி. அதேபோன்று மண்ணுக்குள், நம் கண்களுக்குத் தெரியாத முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
தேவையான நீர்ச்சத்து கிடைக்கும் இடம் வரை, மரங்கள் தங்களது வேர்களை எல்லாத் திக்குகளிலும் நீட்டிச் சென்றுகொண்டே இருக்கின்றன.
'நமது வளர்ச்சிக்குத் தேவையான சூழல் இல்லை என்று சும்மா இருந்துவிடக்கூடாது; எனக்கு எதுவும் சரியாக அமையவில்லையே என்று சோர்ந்து அமர்ந்துவிடவும் கூடாது. வளர்ச்சிக்குத் தேவையானவற்றைப் பெற நாம் எல்லா விதத்திலும் முயன்றுகொண்டே இருக்கவேண்டும்' என்று இயற்கை நமக்கு சொல்லித்தரும் பாடம்தான் மரத்தின் வளர்ச்சி.