
மனித வாழ்க்கையை எளிதாக நகர்த்துவதற்கு தேவையானவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம். இது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். இதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
1. உணவு ஆசை
நாம் உண்ணும் அன்றாட உணவு சில நேரங்களில் சலிப்பு தட்டலாம். ஆகவே மாதத்தில் என்றாவது ஒரு நாள் உணவகம் சென்று விரும்பிய அறுசுவை உணவை உண்டு மகிழ்வது ஆசையாகும்.
பேராசை
உணவை ஆடம்பர ஐந்து நட்சத்திர ஓட்டலைத் தேடி போய் மிக மெல்லிய இசைப் பின்னணியில், மங்கலான ஒளியில் விலையுயர்ந்த உணவு வகைகளை நாள் தோறும் சாப்பிட கடன் அட்டையை உபயோகித்து மாட்டிக் கொள்வது பேராசை ஆகும்.
2. உடுத்த உடை ஆசை
ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கிணங்க, பிறர் நம்மை மதிக்கவும், கௌரவமாக தோற்றமளிப்பதற்கும் எளிய ஆடைகளை உடுத்துவது ஆசை ஆகும்.
பேராசை
பளபளக்கும் கண்ணாடி ஷோ ரூம்களில் கிழித்து தொங்க விடப்பட்ட ஜீன்ஸ் ஆடைகளை விலை அதிகம் கொடுத்து வாங்கி அணிந்து சினிமா நட்சத்திரம் போல பவனி வர நினைப்பது பேராசை தானே!
3. இருக்க இருப்பிடம் ஆசை
ஒரு குடும்பம் மட்டும் வாழக் கூடிய நடுத்தரமான வீட்டைக் கட்டிக் கொள்ள நினைப்பது ஆசையாகும்.
பேராசை
தேவையில்லாமல் நம் வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி ஆடம்பரமான பளிங்கு மாளிகைக் கட்டி அதில் இரு நபர்களோ அல்லது நான்கு நபர்களோ வசிக்க வேண்டிய சூழலில் அதைச் செய்வது பேராசையாகும்.
தேவையை தேர்ந்தெடுத்தால் நலம். ஆசையை தேர்ந்தெடுத்தால் சுகம். பேராசையைத் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை சிக்கலாகும்!
எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் மகிழ்ச்சி நிலவும். எதைத் தேர்ந்தெடுப்பீர்? நன்கு சிந்திப்பீர், செயல்படுவீர்.