எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனம் என்பதே ஆயுதம்.
"காரணங்களும் விளக்கங்களும் சொல்வாயானால் எந்த ஒரு லட்சியத்தையும் உன்னால் அடைய முடியாது." - கார்ல் மார்க்ஸ்.
ஒரு கண்காட்சியில் வைப்பதற்காக அனைத்து நாடுகளிலும் இருந்து அரிய வகை நண்டுகளை எடுத்துச் செல்கின்றனர். இந்தியாவின் சார்பிலும் ஒருவர் எடுத்துச் செல்கிறார். மற்ற நாடுகளின் நண்டுகள் உள்ள டப்பாக்கள் பத்திரமாக மூடப்பட்டு இருந்தன. ஆனால் இந்தியாவை சேர்ந்தவரோ நண்டுகள் உள்ள டப்பாவை மூடாமலே எடுத்துச் செல்கிறார்.
அதைப் பார்த்த இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர் "என்ன இது இப்படி மூடாமல் எடுத்து வருகிறீர்கள்? உங்கள் நாட்டு நண்டுகள் வெகு சுறுசுறுப்பானவை மட்டுமல்லாமல் ஆபத்தானவை என்றும் கேள்விப்பட்டிருக்கிறோமே?" என்று கேட்டார்.
இந்தியர் சொன்னார் "ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் . எங்கள் நாட்டு நண்டுகள் மிகவும் ஆபத்தானதுதான். ஒரே ஒரு நண்டு மட்டும் எடுத்து வந்து இருந்தால் அதை மூடியே எடுத்து வந்திருப்பேன். ஆனால் உள்ளே நான்கு நண்டுகள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு நண்டு வெளியே வரவேண்டும் என்று நினைத்தால் மற்ற நண்டுகள் அதனுடைய காலைப் பிடித்து பின்னுக்கு இழுத்து டப்பாவுக்குள் தள்ளிவிடும். அதனால் நிச்சயமாக எதுவும் முன்னேறி வெளியே வராது என்பதால்தான் மூடாமல் இருக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
யார் எது செய்தாலும் எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனோபாவத்தில் விமர்சித்துக் கொண்டே இருக்கும் நெகட்டிவ் நண்டுகளின் (நபர்கள்) முழு நேரப்பணி என்னவென்றால் அவர்களைச் சுற்றி இருப்பவர்களில் யாராவது ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால் அவர்களை விமர்சனம் செய்தே நான்கு அடி பின்னே இழுப்பதுதான். வெற்றிக்குத் தேவை விமர்சனம்தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
முதலில் ஒன்றை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் கூறுவதில் எது உண்மையான விமர்சனம் அல்லது மோசமான விசுவாசனம் என்பதை பகுத்து உணரும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும். நம் நன்மை விரும்பும் நல்ல நட்புகள் நமது செயலில் உள்ள நல்லது கெட்டது இரண்டையுமே பக்குவமாக விமர்சித்து நம்மை வெற்றிப் பாதையில் செல்ல உதவுவார்கள்.
நமக்கு இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. நெகட்டிவான விமர்சனங்களை எப்படி கடந்து செல்வது என்பதை இந்த பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஹாக் (Hawk) மிகப் பெரிய இறக்கைகள் கொண்ட ஒரு பறவை. இந்தப் பறவை ஒரு மரத்தில் அமர்ந்தால் அதைச் சுற்றி இருக்கும் காகங்கள் அதை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். ஆனால் ஹாக் பறவை எந்த ஒரு எதிர்வினையும் செய்யாது. அது நினைத்தால் இறக்கையின் ஒரே அடியில் அந்த காக்கைகளை கொன்றுவிட முடியும். ஆனால் அது அப்படி செய்வதில்லை. காக்கைகளின் தொந்தரவு தாங்க முடியாமல் போனால் மட்டும் ஹாக் தனது நீண்ட இறக்கைகளை விரித்து மேலே பறக்க ஆரம்பித்துவிடும். அதன் உயரத்துக்கு காக்கைகளால் நிச்சயம் பறக்க முடியாது. பாதி வழியிலேயே அதை துரத்தி செல்லும் காக்கைகள் வீழ்ந்து விடுவது உறுதி.
இந்த ஹாக் பறவை போன்றே நாம் விமர்சனங்களை எதிர்கொள்வதில் இருக்க வேண்டும். விமர்சனம் செய்பவரை புறந்தள்ளி நம்முடைய இலக்கில் மட்டும் கவனம் வைத்து முன்னேறிக் கொண்டே இருக்க பழகவேண்டும்.
நெகட்டிவ் நபர்களை விட்டு விலகி நம் இலக்கை நோக்கி பயணித்து வெற்றி பெறுவோம்.