

“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்று நம் ஊரில் படித்துப் படித்துக் கூறுவார்கள். அதுபோல், சரிவர எதையும் ஆராயாமல் "இதுதான் முடிவாக இருக்கும்" என்று ஒருதலைப்பட்சமாகக் (don't judge people) கூறக்கூடாது என்பதைப் பெரியோர்கள் வலியுறுத்துவார்கள். நாம் யாருடன் பழகினாலும்—வீட்டில் இருப்பவர்கள் முதற்கொண்டு—அனைவரிடத்திலும் அன்பைச் செலுத்தி, அவர்களின் பண்பு நலன்களை நன்கு அறிந்து, புரிந்து நடந்துகொண்டோமானால் உறவு மேம்படும்; அவர்களைப் பற்றிய தாழ்வான எண்ணம் வராது; நம் எண்ண மதிப்பீட்டில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள்.
ஒருமுறை உல்லாசக் கப்பல் ஒன்றில் கணவன், மனைவி இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு பேரிடர் ஏற்பட்டது. கப்பல் மூழ்கும் நிலையில் இருந்தபோது, இருவரில் ஒருவர் மட்டுமே கப்பலை விட்டு வெளியேறி உயிர் பிழைக்க முடியும் என்ற இக்கட்டான சூழல் உருவானது. இருவரும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கக் கூட அவகாசம் இல்லை. அப்போது, மனைவியைக் கப்பலில் விட்டுவிட்டு கணவன் மட்டும் உயிர் தப்பி வீடு திரும்பினான்.
தனக்கு இருந்த ஒரே பெண் குழந்தையை நன்கு வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அவன் வாழ்ந்து வந்தான். அந்தப் பெண் கல்வி கற்றுப் பெரியவளான பிறகு, தந்தை முதுமை அடைந்து இயற்கை எய்தினார்.
தந்தையின் மறைவிற்குப் பிறகு, மகள் அவரது அறையைத் தூய்மைப்படுத்தினாள். அப்போது படுக்கையில் இருந்த தலையணையின் அடியிலிருந்து ஒரு பழைய நாட்குறிப்பு (Diary) கிடைத்தது. வியப்புடன் அதை ஒவ்வொன்றாகப் படித்து வந்த மகள், ஒரு கட்டத்தில் அதிர்ந்து போனாள். இதுவரை அவள் அறிந்திராத ஒரு செய்தி அவள் கண்ணில் தென்பட்டது. அதைப் படித்த அவளுக்குக் கண்ணீர் அருவியெனக் கொட்டியது.
அந்த நாட்குறிப்பில் தந்தை எழுதியிருந்தது இதுதான்:
"எனது மனைவிக்குக் குணப்படுத்த முடியாத 'மீளா நோய்' இருந்தது. அதனால் எங்களுக்குள்ளேயே ஒரு புரிதல் இருந்தது. கப்பலில் விபத்து நேர்ந்தபோது, குழந்தையான மகளை வளர்த்து ஆளாக்கும் கடமை எனக்கு இருந்ததால், என் மனைவி தன்னைத் தியாகம் செய்து என்னைத் தப்பிச் செல்லச் சொன்னாள். அந்தத் துயரமான முடிவைத் தவிர்க்க முடியாத சூழலில் நான் எடுக்க வேண்டியதாயிற்று."
அதுவரை அந்தச் சம்பவத்தின் பின்னணியை அறியாத அந்தப் பெண், "தாய் இறக்கத் தந்தை மட்டும் எப்படித் தப்பி வந்தார்? இது அவரது சுயநலத்தால் ஏற்பட்ட முடிவோ?" என்று எண்ணியிருந்தாள். தந்தை தன்னிடம் பாசம் காட்டினாலும், மனதின் ஒரு ஓரத்தில் அந்தச் சந்தேகம் நிழலாடிக்கொண்டே இருந்தது.
ஆனால், அந்த நாட்குறிப்பின் வாயிலாகத் தந்தையின் திடசித்தம் மற்றும் தாயின் தியாகம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், அவள் உண்மையை உணர்ந்தாள். அவர்கள் எத்தகைய நெருக்கடியில் அந்த முடிவை எடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அழுது தீர்த்தாள்.
எதையும் மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டு அவசரத் தீர்ப்பு வழங்குவது உண்மையைச் சவக்குழிக்குள் தள்ளுவதற்குச் சமம்.
ஒவ்வொருவரின் சூழ்நிலை, நிர்பந்தம் மற்றும் அடிப்படை நோக்கம் வேறாக இருக்கலாம். புறப்பார்வைக்கு ஒரு செயல் கொடுமையானதாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் ஒரு நியாயம் இருக்கக்கூடும்.
சரியான புரிதலே உண்மையை உரக்கச் சொல்லும்; நம் மனதை உயர்த்தும்.
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது அறிதல், தெரிதல் மற்றும் புரிதல். இதனை நம் சிந்தையில் என்றும் பதிப்போம்!