எத்தனை தொழில் தொடங்கினாலும் தோல்விதான்! காரணம் இதுதான்!

Have a great success
To succeed in business
Published on

தினம் தினம் சொந்தமாக தங்களுக்குத் தெரிந்த தொழிலை பலரும் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலர் வேகமாக வெற்றி அடைகிறார்கள். ஆனால் அதே வேகத்தில் காணாமலும் போகிறார்கள். மற்றும் சிலர் எடுத்த எடுப்பிலேயே தோல்வியைத் தழுவுகிறார்கள்.

வேறு சிலரோ பெரிய வெற்றியைப் பெறாமலும் தோல்வியைத் தழுவாமலும் ஒரே நிதானத்தில் தங்கள் தொழிலைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். சில வருடங்கள் கழித்து தங்கள் தொழிலை விரிவுபடுத்தி வெற்றியாளராக வலம் வருகிறார்கள். இது வெற்றி தோல்வி விதி எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும்.

எந்த ஒரு தொழிலைத் தொடங்கினாலும் அதைத் தொடங்குபவருக்கு நேர்மை மிகவும் முக்கியம். சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்துக் கொடுக்கும் தன்மையும் முக்கியம். செய்த வேலைக்கு சரியான சம்பளத்தைப் பெறவேண்டும். செய்த வேலையில் ஏதேனும் பிழை ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் அழைத்தால் உடனே சென்று அதை சரிசெய்து கொடுப்பவராக இருக்க வேண்டும்.

பணத்தைக் குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் வேலைகளையெல்லாம் ஒப்புக் கொள்ளாதவராக இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் மனதில் தொழிலைச் செய்பவர் குறித்த நேரத்தில் பணியை முடித்துக் கொடுக்கும் தன்மை படைத்தவர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையானவர் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

கிடைத்த எல்லா வேலைகளையும் ஏற்றுக் கொண்டு அதை உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் வாடிக்கையாளரின் கோபத்தைச் சம்பாதித்து பின்னர் அவசர அவசரமாக அந்த வேலையை அரைகுறையாகச் செய்து கொடுப்பவர்களைத்தான் இப்போது நாம் அதிகமாகக் காணமுடிகிறது.

சீக்கிரம் தான் செய்யும் தொழிலில் சம்பாதித்து பணக்காரராகி விட வேண்டும் என்ற தவறான எண்ணமே இத்தகைய தவறுகளுக்குக் காரணமாக அமைகிறது. அடியெடுத்து வைத்த வேகத்தில் வேகமாக முன்னேறி பின்னர் வெகுவிரையில் தோல்வியைச் சந்திப்பது இதனால்தான் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் செய்யும் எந்த ஒரு வேலையும் முதலில் நம் மனதிற்குத் திருப்தியை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே வாடிக்கையாளர் திருப்தி அடைய வேண்டும். எந்த ஒரு வேலையையும் விரும்பி கவனமாக நிதானமாகச் செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வேலையில் தவறு நிகழாது.

வாடிக்கையாளர் ஒரு வேலையை ஒப்படைத்தால் அதை உரிய நேரத்தில் செய்து முடிக்காமல் அரை பலமுறை இழுத்தடிப்பது கடைசியில் தோல்வியில் போய் முடியும். பலர் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு தொழிலில் அலட்சியமாக இருப்பதால்தான் விரைவிலேயே தோல்வியைத் தழுவி கடனாளியாகி கஷ்டப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்கும் இந்த ஒரு விஷயம்! உடனே இதை நிறுத்துங்கள்!
Have a great success

பொதுவாக வெற்றியாளர்கள் அவசரப்படமாட்டார்கள். எந்த ஒரு வேலையையும் நிதானமாகச் செய்பவராக இருப்பார்கள். வாடிக்கையாளரின் திருப்தி முக்கியம் என்பதில் கவனமாக இருப்பார்கள். செய்த வேலைக்கு சரியான சம்பளத்தைப் பெறுபவராக இருப்பார்கள். பணம் வருகிறதே என்று எல்லா வேலைகளையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

வாடிக்கையாளர் கோபமாகப் பேசினாலும் அவரிடம் கோபப்படாமல் கனிவாக பதிலளிப்பவர்களாக இருப்பார்கள். குறித்த நேரத்தில் வேலையை முடித்து வாடிக்கையாளரை மகிழ்ச்சிக்குள்ளாக்குபவர்களாக இருப்பார்கள். இதனால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள் அவரைப் பற்றி தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி பரிந்துரைப்பார்கள். இப்படியாக மெல்ல மெல்ல நிதானமாக வளரும் தொழில் முனைவோர்கள் பிற்காலத்தில் தங்கள் தொழிலை ஆலமரம் போல விரிவுபடுத்தி சாதனையாளர்களாக ஜொலிப்பார்கள்.

எவர் ஒருவருக்கும் வெற்றி என்பது மாடிப்படிகளில் மெல்ல மெல்ல ஏறுவதைப்போல அமைய வேண்டும். மாறாக லிப்டில் சில நிமிடங்களில் பல மாடிகளை அடைவதைப்போல இருக்கக்கூடாது. நிதானமான வெற்றி நிலையான வெற்றி என்பதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com