
இறைவன் நமக்கு கைகால்களை நேராக வடிவமைத்து படைத்திருக்கிறான். அதை நாம் நல்ல விதமான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும். சிலர் அரசியல் செல்வாக்கு, முன்னோா்கள் சோ்த்து வைத்த சொத்துகள், கைநிறைய சம்பாதிக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பாா்கள். அதுபோன்ற நிலையில் சிலரே வாழ்க்கையை சீராக வாழப் பழகிக்கொள்கிறாா்கள்.
சிலரோ தனது பலம் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 'நான்' என்ற அகந்தையில் சமுதாயத்தில் அடாவடித்தனம், ரெளடித்தனம், கட்ட பஞ்சாயத்து, பல தேவையில்லா சகவாசம், போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, மாமூல் வசூல், இப்படி தன் நிலை மறந்து ஏக தேச சக்கரவர்த்தியாகவும் வலம் வருவதும் நடைமுறை.
தர்மம், நியாயம், அடுத்தவருக்கு தீங்கு செய்யாத நல்ல எண்ணம், இறை வழிபாடு அனைவரையும் மதிக்கும் தன்மை, தான் உண்டு தன் வேலை முக்கியம் என்ற உயர்ந்த சிந்தனையுடன், அந்நியன் திரைப்பட அம்பி போல வாழ்பவர்களும் உண்டு.
இதில் "எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதோ?" வலியோா் செய்யும் அக்கிரமங்களையெல்லாம் இறைவன் பாா்த்துக்கொண்டுதான் இருக்கிறாா்.
எதற்கும் ஒரு எல்லை உண்டு, அதை மீறி தன் வீரபராக்கிரம செயல்களுடன் பதவி, பகட்டு, ஆள்பலம் போன்ற இனங்களை கண்டுகொண்டு கூடவே பழகி அவரின் பலவீனம் அறிந்து வேறோடு சாய்க்க அவரோடு துணையாய் இருப்பவர்களும் உண்டல்லவா?
என்னதான் அதர்மம் தலைதூக்கினாலும், தர்மமே ஜெயிக்கும் அதுவே நிஜம்.
அடுத்தவரை ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பும், பணமும் ஏதாவது ஒரு ரூபத்தில் காணாமல் போய்விடும் என்பதை அதர்மவாதிகள், அடுத்துக் கெடுப்பவர்கள் உணரவேண்டும்.
அப்படி இல்லாத நிலையில் அவருக்கு அழிவு எந்த ரூபத்திலாவது வந்து சோ்ந்துவிடும் .
இதற்கு 'ஈசாப்' நீதிக்கதைகளில் வரும் 'சிங்கமும் முயலும்' கதையை மேற்கோள் காட்டலாம்.
காட்டில் பலம் மிகுந்த சிங்கம் அங்குள்ள ஏனைய மிருகங்களை தினசரி வேட்டையாடி வந்தது. அப்போது ஏனைய மிருகங்கள் கூட்டமாக ஒன்று சோ்ந்து சிங்கத்தை அதன் குகையில் சந்தித்தன.
அனைத்து மிருகங்களையும் பாா்த்த சிங்கத்திற்கு கொஞ்சம் பயம் வந்தது. ஏனைய மிருகங்களும், சிங்கராசா நீங்கள் தான் எங்களுக்குத் துணை நீங்கள் இரைதேட அங்கு வந்து அலைய வேண்டாம், நாங்களே தினசரி ஒரு மிருகத்தை அனுப்பிவைக்கிறோம், என்றதும் சிங்கமும் ஒத்துக்கொண்டது.
தினசரி வாடிக்கையான நிலையில் அன்று முயலின் டோ்ன். முயலோ தாமதமாக போனது. கோபமடைந்த சிங்கமோ ஏன் தாமதம் எனக்கேட்டதும் வரும் வழியில் பாழடைந்த குகையில் ஒரு சிங்கம் உள்ளது. அது என்னைத் துரத்தியது நான் உங்களுக்கு உணவாக வேண்டுமே என தப்பித்து வந்தேன். நீங்கள் என்னுடன் வாருங்கள். அதை அடையாளம் காட்டுகிறேன் என அழைத்ததும் சிங்கமும் போனது.
முயல் சிங்கத்தை குகையில் இருந்த நீா் நிரம்பிய கிணற்றைக்காட்டி இங்குதான் அந்த சிங்கம் உள்ளது, என்றவுடன் சிங்கம் எட்டிப்பாா்க்க, அதன் பிம்பம் தொிந்து உறுமியது.
அப்போது அதன் உருவம் தண்ணீாில் பிரதிபலித்தவுடன் கோபங்கொண்ட சிங்கமோ அதனுடன் மோதுவதற்காக கிணற்றுக்குள் குதித்து மேலே ஏற முடியாமல் தவித்து, உயிா் விட்டது.
சந்தோஷமடைந்த முயல் காட்டுக்குள் ஓடிப்போய் நடந்ததைச் சொன்னவுடன் ஏனைய மிருகங்கள் சந்தோஷம் அடைந்தன.
இதிலிருந்து என்ன தொிகிறது? 'வல்லவனுக்கு வல்லவன்' வையகத்தில் உண்டல்லவா!
இன்று நீதி அநீதியிடம் தோற்றாலும், இறுதியில் நீதியே வெல்லும் என்பதே நிஜம்...'நான்' எனும் அகம்பாவம் கொண்டவர்கள் எந்த வகையிலாவது தனக்கான அழிவைத் தானே தேடிக் கொள்வாா்கள்.