
இரு பெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மற்றொன்று இராமாயணம். வியாச முனிவர் சொல்ல, விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறப்படுகிறது. 18 லட்சம் சொற்கள் கொண்ட, 74,000க்கும் மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடை பத்திகளையும் இது கொண்டுள்ளது. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசமாகவும் கருதப்படுகிறது.100,000க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களும், 200,000க்கும் மேற்பட்ட வரிகளும் உள்ளன. இந்த இதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பைக் கொண்டது.
விதுர நீதி ஐந்தாம் பருவமான உத்தியோக பருவத்தில் வருகிறது. திருதராஷ்டிரனுக்கு விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பற்றியும், என்னென்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்கிற வாழ்வியல் நீதி நெறிமுறைகளை விளக்கிக் கூறும் பகுதிதான் விதுர நீதி. விதுரநீதி என்பது எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியது; ஒத்து வரக்கூடியது.
மகாபாரதத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதையைப் போன்று திருதராஷ்டிரனுக்கு கூறிய நீதிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ராஜ தர்மம் முதல் சாமானியர்களுக்கான நெறிமுறைகள் வரை விளக்குவது விதுரநீதி.
அதிக அகந்தை, அதிகமான பேச்சு, அதிகமான கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கை துரோகம் இழைப்பது, பெரிய குற்றங்கள் செய்வது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.
பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். ஆனால், கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
பிறர் போற்றும்பொழுது சந்தோஷமும், தூற்றும் பொழுது துக்கமும் அடையாமல் இருப்பவன்தான் பண்டிதன். இவன் தொலைந்து போனதை நினைத்து துக்கப்படவும் மாட்டான்.
பண்டிதன் என்பவன் தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டால் மட்டுமே சொல்லும் இயல்புடையவன் ஆவான்.
முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டும் என்றால் இளமையிலேயே அதற்கு தக்கவைகளை செய்துகொள்ள வேண்டும்.
பெரியோரை மரியாதையாக வணங்குவதும், அவர்களுக்கு பணிவிடை செய்வதும் ஒருவனுக்கு பல சாதனைகளைச் செய்யும் ஆற்றலைத் தருவதுடன் ஆயுள், புகழ், சக்தி ஆகியவற்றையும் பெருகச் செய்யும்.
அதீத பொறாமை, மரண பயம், தற்புகழ்ச்சி ஆகியவையே செழிப்பாக வாழும் ஒருவனின் அழிவுக்கான காரணங்களாகும்.
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனத்துடன் செயல்பட்டு வாழ்வினை அழகாக்கிக் கொள்வதே நல்ல மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும்.
செல்வம் நிறைந்திருந்தாலும் நல்ல குணங்கள் இல்லாதவனுடன் எந்த காலத்திலும் நட்பு கொள்ளக்கூடாது.
அறம் சார்ந்து நிற்பவர்களின் வலிமை எதுவென்றால், அவர்களுடைய மன்னிக்கும் தன்மையே வலிமையாகும்.
முயற்சி, சுயக் கட்டுப்பாடு, செயல்படும் திறன், கவனம், உறுதி, நினைவு, அனுபவ முதிர்ச்சியுடன் தீர்மானித்த செயல்களின் தொடக்கம் ஆகியவையே செழிப்பின் வேர்கள்.
மன்னிக்கும் இயல்பு வலிமைக்கு சமமானது என்றும், வாழ்க்கையில் நல்லொழுக்கம் மிகவும் முக்கியமானது; பற்றுதல் இல்லாத நிலை வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதிக்கு வழி வகுக்கும் என்றும்; நல்லொழுக்கமும் நீதியும் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது என்பதை விதுர நீதி வலியுறுத்துகிறது. இது வாழ்வின் தத்துவங்களை விளக்குவது மட்டுமல்லாமல், வாழ்வதற்கு வழி காட்டவும் செய்கிறது.