சிலர் எப்பொழுதும் பதட்டத்திலேயே இருப்பார்கள். அது என்ன ஆகும். இது என்ன ஆகும். இது ஏன் இப்படி நடந்தது. அது ஏன் அப்படி நடந்தது என்று தனக்குள்ளேயே ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு பதட்டத்திலேயே இருப்பார்கள். கேட்டால் ஒரே டென்ஷன் என்று சொல்வார்கள். இதனால் என்ன நடக்கப் போகிறது எதுவும் நடக்காது. இன்று இல்லை என்றால் நாளை இவ்வளவுதான். பதட்டத்தை விட்டு ஒழித்து மன அமைதியை கொடுக்கும் இந்த 5 யோசனைகளை படியுங்கள்
அமைதியான சூழலில் அமருங்கள். மூச்சை ஆழமாக இழுத்துவிடுங்கள். மார்பை விரிக்காமல், வயிறு முழுக்க காற்று நிரம்புவது போல வேகமாக மூச்சை இழுத்து விடுங்கள். 'இதில் மார்க் குறைந்துவிடுமோ'. 'இன்டர்வியூவில் நமக்குத் தெரியாத கேள்வியைக் கேட்பார்களோ' என்பது போன்ற நினைப்புகளைத் தூக்கிப் போட்டுவிட்டு, உங்கள் நாசி வழியே சென்று திரும்பும் மூச்சில் மட்டுமே கவனம் வையுங்கள். மனமும் உடலும் அமைதி அடையும். நடக்காத எதிர்காலம் பற்றிய கவலைகள் போய், நிகழ்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் அதன் பின் யோசிக்கலாம்.
இப்படிப்பட்ட தருணங்களை பசியோடு எதிர் கொள்ளாதீர்கள். ஒருவேளை கிளம்பும்போது பசிக்கவில்லை என்றாலும், அங்கு சென்று காத்திருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். பசியில் இருக்கும்போது மனம் ஒருவித எரிச்சலில் எதிர்மறையான விஷயங்களையே யோசிக்கும். அதனால் குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பம், பதற்றமாக வெளிப்படும்.
நடக்கப்போகும் அந்த சந்திப்பு, அந்த நிகழ்வு பற்றிய எண்ணமே உங்களுக்குப் பதற்றம் தருகிறதா? அமைதியாக அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பிடித்த டி.வி. சேனல் பார்க்கலாம். விரும்பிய புத்தகம் படிக்கலாம். நண்பர்களோடு அரட்டை அடித்து மனநிறைவு பெறலாம். நடக்கப்போகும் விஷயம் முழுமையாக நம் கட்டுப்பாட்டில் இல்லை எனும்போது, அதை நினைத்து பதற்றப்படுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது?
ஒரு பைக்குள் ஏதாவது ஒரு பொருள் இருக்கும்போதுதான் எடை கூடுகிறது. உங்கள் மனதில் பிரச்னையை ஏற்றி வைத்தால், மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதை எப்படியாவது துரத்தும் வழியைத் தேடுங்கள். இதை எப்படி எதிர்கொள்வது என நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். இதேபோன்ற சூழலை எதிர்கொண்டவர்களின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவும்!
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. அதுதான் இந்த வாழ்வை சுவாரசியம் ஆக்குகிறது. எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தின் இன்பங்களை இழந்து விடாதீர்கள். இந்தக் கணத்தில் வாழுங்கள். உங்கள் சூழலில் இருக்கும் சுவாரசியங்களை உற்றுப் பாருங்கள். ஒரு குழந்தையின் சிரிப்பு, ஒரு அழகிய ஓவியம், ஒரு வண்ணமயமான மலர்... இவை தரும் ரசனைகளால் மன மகிழ்ச்சி பெறுங்கள்.