நோகாமல் நுங்கு எடுக்க முடியுமா Boss?

Motivation image
Motivation imagepixabay.com

வெற்றி பெறுவது என்பது நோக்கமாக இருந்தாலும் அந்த வெற்றியையும் எளிதாக பெரும் வழிகள் இருக்கிறதா என்பதிலேயே பலருக்கும் கவனம் இருக்கும்.

‘நோகாமல் நுங்கு எடுப்பது’ என்னும் ஒரு பழமொழி உண்டு. நுங்கு நாம் சாப்பிட வேண்டும் என்றால் அதன் மேல் இருக்கும் கடுமையான ஓட்டினை நீக்க வேண்டும். ஆனால், அந்த ஓட்டினைச் சிரமப்பட்டு நீக்குவதற்குத் தயங்கி, ‘எனக்கு நுங்கே வேண்டாம்’ என்று ஒதுங்குபவர்களும் உண்டு. நோகாமல் நுங்கு எடுக்க முடியுமா? அப்படித்தான் பல சோதனைகளையும், வேதனைகளையும், தடைகளையும் சந்தித்தப்பின் கிடைக்கும் வெற்றியும்.  ஓடுகள் போன்ற தடைகளை எதிர்கொள்ளாமல் வெற்றிதான் வேண்டும் என நினைப்பவர்கள் நுங்கு எனும் அந்த இனிமையான வெற்றியைத் தவறவிடுவார்கள்.

‘சரி நாங்கள் தடைகளைத் தாண்டுகிறோம். ஆனால் அந்தத் தடைகளைத் தாண்டும் ரகசியம் ஏதேனும் உள்ளதா?’ என நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக உண்டு. உங்களை நீங்களே நேசிப்பதுதான் அந்த ரகசியம்.

ஆம். இந்த உலகத்தில் தன்னைத்தானே நேசிக்காத மனிதர்களால் நிச்சயம் வெற்றியடையவே முடியாது. முதலில், உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்கள் நீங்கள் விரும்பும் வண்ணம் இருக்கவேண்டும். அப்படி அமையவில்லை எனினும் உங்களுக்குப் பிடித்தமானதாக மாற்றிக்கொள்ள பழக வேண்டும்.

உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.

உங்களைப்போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே, நீங்களே நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

நம்மை எதிலும் குறைத்தோ, அதிகமாகவோ மதிப்பிட்டு சுருக்கிக்கொள்ளாமல் நமது நிறை குறைகளுடன் நம்மை அப்படியே நேசிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
3 வகை மொறு மொறு ஸ்நாக்ஸ்... 15 நிமிடத்தில் செய்து அசத்துவோமா?
Motivation image

நாலு பேர் என்ன சொல்வார்கள் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்து, நம் மனம் என்ன சொல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்த அந்தப் பெண்மணிக்கு வயது 60க்கும் மேல். குடும்பம், குடும்பம், குடும்பம் என அவர் நினைப்பு அவர் செயல்கள் அனைத்துமே அவருடைய குடும்பத்தை சுற்றியே இருக்கும். வெளியே அதிகம் வரமாட்டார். பிள்ளைகளின் கடமைகள் முடித்து ஒரு கட்டத்தில் அவருடைய கணவர் இறந்துபோனார். சில மாதங்கள் ஆயிற்று. அவரை என்றும் இல்லாத புதுவித தோற்றத்தில் பார்த்தேன். அதாவது எப்பொழுதும் சேலை அணியும் அவர் சுடிதார் அணிந்திருந்தார். ஆச்சரியமாக இருந்தது. மனம் விட்டு பேசியபோது  அவர் சொன்ன வார்த்தைகள் இது:  "நான் இனி எனக்காக வாழப்போகிறேன். இதோ என்னை நான் நேசிக்கப்போகிறேன். அதன் முதல் படிதான் இந்த ஆடை மாற்றம்."

அதன்பின்னர் அவரை மீண்டும் சந்தித்தபோது அவர் அவ்வளவு மகிழ்ச்சியாக மாறியிருந்தார். ஆம் அங்கிருந்தவர்கள் ஆலோசனை சொல்லும் ஆன்ட்டியாக மதிப்புக்குரிய வாழ்க்கையை அவர் அனுபவித்து வாழ்கிறார் தற்போது. அவரின் இந்த பெரும் மாற்றத்திற்கான முதல் காரணம் அவர் அவரை நேசித்து தன்னை மாற்றிக் கொண்டதுதான்.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று அறியாத இந்த வாழ்க்கை ஒரு பயணம். இந்த நீண்ட நெடும்பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்குத் தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே. நம்மை நாமே நேசிக்கத் தொடங்கினால் அந்த வயதும் நமக்கு ஏறாமல் உதவி செய்யும்.

நோகாமல் நுங்கு எடுக்க முடியும்... நம்மை நாமே நேசித்தால்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com