
பேசும் கலையையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள் உண்டு. மேடை முழக்கத்தைத் தொழிலாக கொண்டவர் களும், அரசியல் மேடை, இலக்கிய மேடை, பட்டிமன்றம், விவாத அரங்கம் என பல வடிவங்களில் மேடை காட்சிகள் நடந்து வருவதைக் காண்கின்றோம். ஒரு கூட்டத்திற்கு இவ்வளவு என்று கொடுத்தால் தான் கலந்துகொள்ள இயலும் என்று விதி வகுத்துக்கொண்டு செயல்படும் மேடை வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதிலிருந்து பேச்சு ஒரு கலை என்பதை புரிந்துகொள்ளலாம்.
உலகத்திலேயே முதன் முதலாக ரஷ்யாவில் புரட்சியை நடத்திக் காட்டிய லெனில் மிகப் பெரும் சொற்பொழிவாளர் என வரலாறு பதிவு செய்திருக்கிறது. ரஷ்ய புரட்சியின் வெற்றிக்கு லெனினு டைய ஆழ்ந்த சிந்தனையும், அயராத உழைப்பும் எப்படி முக்கியமானதோ அதேபோன்று அவரது முழக்கமும் முக்கியமானதாகும்.
1917 நவம்பர் 7 புரட்சி தொடங்கும்படியாக அரோரா கப்பல் வெடி முழக்கம் செய்தது. ஜார் மன்னரின் மாரிக்கால அரண்மனையை புரட்சிக்காரர்கள் நெருங்கியதும் ஜார் மன்னர் அவர்களை சுட்டுத்தள்ள ஆணை பிறப்பித்தான். அவர்களும் சுடுவதற்கு தயாராகிவிட்டனர்.
அப்போது தமது சுட்டு விரலை நீட்டி, "ஒரு நிமிடம்" என்றார் லெனின். ஜார் மன்னரின் படை வீரர்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக்கொண்டு ராணுவ வீரர்களே! இங்கே நீங்கள் சுட்டு வீழ்த்தப்போவது யாரை? எங்கள் பேரணியில் உங்கள் பெற்றோர் இருக்கலாம் அல்லது உங்கள் உடன் பிறந்தவர்கள் இருக்கலாம். இல்லையெனில் உங்கள் உறவினர்கள் இருக்கலாம். அவர்களையா சுட்டுத்தள்ளப் போகிறீர்கள்? சுட்டுத் தள்ள வேண்டியது மாரிக்கால அரண் மனைக்காரர்களைத் தவிர, உங்களோடு சேர்ந்து பிறந்த எங்களை அல்ல" என்று லெனின் பேசியதைக் கேட்டு ஜார் மன்னனின் படைகளில் பலர் புரட்சி வீரர்களோடு சேர்த்து ஜார் மன்னனின் எதிர்ப்பில் கலந்து கொண்டனர்.
அதனால்தான் அதிக உயிர் பலி இல்லாமல், அதிக சேதாரம் இல்லாமல், அதிக நாட்கள் நடக்காமல், ஒரு யுகப் புரட்சியை லெனினால் நடத்திக்காட்ட முடிந்தது. லெனினின் இந்தப் புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் அவர் சுட்டு விரல் நீட்டியபடி முழு உருவச்சிலையை மாஸ்கோவில் நிறுவினர்.
அறிஞர் அண்ணாவின் நாடக மொழி தமிழால் தமிழ் இளைஞர்கள் தமிழில் பேச தொடங்கினர் என்பது வரலாறு.
மேலே குறிப்பிட்ட இவர்களின் பேச்சு அரசியல்வாதிக்கும், இலக்கியவாதிகளுக்கும் பொருந்தும். ஆனால் அன்றாட வாழ்க்கையில் போராடிக் கொண்டு முன்னேறுவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் பேச வேண்டாத இடத்தில் பேசுவதும் பேதமை.
எதைப் பற்றி பேசவேண்டுமோ அதை அதற்கு மிக அண்மையில் இருந்தே பேச வேண்டியதை, சொல்ல வேண்டியதை ஆணித்தரமாகச் சொல்லி முடித்து விடுவதுதான் ரத்தின சுருக்கமான பேச்சு என்பது. அப்படி பேச வேண்டியதுதான் அவசியம்.