Nothing to take away…let's give and go!
Motivation articlesImage credit - pixabay

எடுத்துச் செல்ல எதுவுமில்லை… கொடுத்துச் செல்வோம்!

Published on

டுத்துச் செல்வதற்கு இங்கு எதுவும் இல்லை கொடுத்துவிட்டாவது செல்வோம் உண்மையான அன்பையும், தன்னலம் இல்லாத நட்பையும். நட்பு என்பது எந்த ஒரு தயக்கமும் இன்றி நாம் நாமாகவே நடந்து கொள்ளும் ஒரு இடம். எந்த ஒரு சூழ்நிலையிலும் சுயநலமின்றி ஒருவருக்கொருவர் நல்லதை மட்டுமே நினைக்கும் உள்ளமே உண்மையான நட்பு.

அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு. அதை பெற்றாலும் இன்பம் கொடுத்தாலும் சந்தோஷம்தான். அன்பை மட்டுமே கடன் கொடுங்கள். அது அதிக வட்டியுடன் நமக்கே திரும்ப கிடைக்கும்.

உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும் அன்புக்காகத்தான் ஏங்கி நிற்கிறது. அன்பினால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும்போது!

நம்முடைய நாக்கு எப்பொழுதுமே ஈரமாக இருக்கும். நம் வார்த்தைகளும் அதேபோல்தான் கடுமையாக இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும். நாக்கை விட ஆபத்தான, கூர்மையான ஆயுதம் எதுவும் கிடையாது. அதனால்தான் கடவுள் நாக்கை வாயில் அடைத்து, அதன் எல்லா பக்கங்களிலும் பற்கள் அமைத்து கூண்டில் சிக்கிய விலங்குபோல் ஆக்கிவிட்டார் என்று கூறப்படுவதுண்டு.

நாக்கு என்னும் கூர்மையான ஆயுதத்தால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், இனிமையான சொற்கள் பேசி அன்பையும், நட்பையும் வளர்க்க வேண்டும். நாம் இந்த பூவுலகை விட்டுச் செல்லும் பொழுது எடுத்துச் செல்வதற்கு என்று ஒன்றும் இல்லை. கொடுத்து விட்டு செல்வோம் உண்மையான அன்பையும் தன்னலமற்ற நட்பையும்.

கடவுள் நமக்கு இரண்டு காதுகள், இரண்டு கண்கள் என கொடுத்தவர் ஒரே ஒரு நாக்கை மட்டும் கொடுத்திருக் கிறார். நாக்கை விட காதுகளையும், கண்களையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய எண்ணம் போலும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பழமையான ரிக் வேதம் இனிமையாகவும் மென்மையாகவும் பேசுபவர்களுக்கு எதிரிகளே இல்லை எனவும், செல்வமும், அதிர்ஷ்டமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளது.

ஒரு பொருளின் மீது அன்பை வைப்பதை விட நம் கண் முன் நடமாடிக் கொண்டிருக்கும் நபர்களின் மீது உண்மையான அன்பை  செலுத்துவது நமக்கு மட்டுமின்றி எதிராளிக்கும் அமைதியையும், சந்தோஷத்தையும் தரும்.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செலுத்தப்படும் அன்பே உலகில் சிறந்தது. இதை கொடுப்பவர்களும் பெறுபவர்களும் மிகவும் சிறந்தவர்கள். சிலருக்கு அன்பை பரிமாறுவது ஒரு பண்டமாற்று போலவே தோன்றுவதால் தான் உறவுகளில், நட்புகளில் சிக்கல்களும் விரிசல்களும் உண்டாகிறது.

இதையும் படியுங்கள்:
தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!
Nothing to take away…let's give and go!

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செலுத்தப்படும் அன்பு ஏமாற்றம் தராது. உண்மையான தன்னலம் கருதாத நட்பு என்றைக்கும் மாறுவதோ மறைவதோ கிடையாது. நம்மிடம் அன்பு கொண்டவர்களை இதயத்தில் வைப்போம். நம் அன்பைக் கொண்டே நம்மை பலவீனப்படுத்தும் நபர்களிடமிருந்து கொஞ்சம் எச்சரிக்கையுடன் தள்ளியே இருப்போம்! அன்பு என்பது அன்பினால் ஆளுமை செய்ய மட்டுமே என்பதை நினைவில் கொள்வோம்.

ஓரறிவு கொண்ட மரமே தன்னலம் கருதாமல் மற்றவருக்காக மட்டுமே வாழ்ந்து மடியும் பொழுது ஆறறிவு கொண்ட நாம் உண்மையான அன்பையும், தன்னலமற்ற நட்பையும் கொடுத்து விட்டு செல்வோம். இப்பூவுலகை விட்டுச் செல்லும் பொழுது எடுத்துச் செல்வதற்கு இங்கு  எதுவுமில்லை. கொடுத்து விட்டாவது செல்வோம்.

logo
Kalki Online
kalkionline.com