எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் தோல்வி அடைந்தால், பயம் ஏற்படும். மறுபடி முயற்சி செய்ய தயக்கம் ஏற்படும். பயம் மற்றும் தயக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம் சகஜம்தான். அத்தகையோரிடம் உன்னால் முடியும் என்று சொல்லி நம்பிக்கையை வளர்க்க வேண்டும். மற்றவரைக் காட்டி அவர்போல் ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதைவிட்டு உன் மேல் நம்பிக்கை வை. உன்னால் முடியும் என்று அவர்கள் தங்கள் மேலேயே நம்பிக்கை வைக்க ஊக்குவிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று லட்சியத்தோடு இருப்பவர்களுக்குத் தன்னம்பிக்கைதான் மூலதனம். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். அவர்களைச் சார்ந்து எந்த முடிவும் நாம் எடுக்கக்கூடாது. அவர்கள் முன்னேற உபயோகித்த உத்திகளைப் பயன்படுத்தலாம். அதுவும் நேர்வழியில் செல்வதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் முன்பே தன்னம் பிக்கையை வளர்க்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் வளரும் குழந்தைகள் கல்வியிலும் சிறந்து விளங்கு வார்கள். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தலே முதற்கல்வி. பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றாலும் குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்கவேண்டும்.
அவர்கள் தவறு செய்தால் மன்னித்து அது தவறு இனி செய்யக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி புரிய வைக்க வேண்டும். பாடத்திலோ ஏதாவது போட்டியிலோ தோல்வி அடைந்தால் மறுபடி முயற்சி செய் என்று உற்சாகப்படுத்த வேண்டும். அடுத்த முயற்சியில் வெற்றி பெற முன்னே செய்த தவறுகளைத் தவிர்க்க உதவி செய்ய வேண்டும்.
பெண் குழந்தைகளுக்குத் தற்காப்பு கலைகள் கற்றுத் தருவதின் மூலம் அவர்கள் தன்னம்பிக்கை வளரும். பெண்ணோ, பையனோ கண்டிப்பாக ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்குவார்கள். படிப்பாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. வேறு துறையாக இருக்கலாம். அதைக் கண்டுபிடித்து ஊக்குவித்து வெற்றி பெறச் செய்வது பெற்றோரின் கடமை. துன்பம் தோல்வி வரும். அதில் வெற்றிக்கான வழி இருக்கும். முயற்சியைக் கைவிடாது இருக்க தன்னம்பிக்கைத் தேவை.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்.
முயற்சி இல்லாமல் ஏதுமில்லை. முயற்சி வெற்றிக்கு வழி காட்டும். தன்னம்பிக்கையுடன் வளருவோம். பிள்ளைகளை வளர்ப்போம். வெற்றிப்பாதையை நோக்கி.