

சிவப்பரிசி ஆப்பம்
தேவை:
சிவப்பரிசி, பச்சரிசி - தலா 200 கிராம்
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு
வெந்தயம் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும். அல்டிமேட் சுவையில் சிவப்பரிசி ஆப்பம் ரெடி.
ராகி ஆப்பம்
தேவை:
ராகி மாவு - 2 கப்
பச்சரிசி - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
அவல் - 1 கப்
உளுந்து - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சரிசி, உளுந்து மற்றும் இட்லி அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊறவைத்த பச்சரிசி, உளுந்து மற்றும் இட்லி அரிசியுடன் தேங்காய் துருவல், அவல், ராகி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து முதல் நாளே அரைத்து, புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டுத் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சு டானதும் அதில் ஒரு கரண்டி ஆப்பம் மாவு ஊற்றி, துணியால் சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். பின்பு ஒரு தட்டை வைத்து 2-3 நிமிடம் அதை மூடி வேகவைத்து எடுத்தால் சுவையான, சத்தான ராகி ஆப்பம் தயார்.
குதிரைவாலி ஆப்பம்
தேவை:
குதிரைவாலி - ஒரு கப்,
கார் அரிசி - ஒரு கப்,
உளுந்து - கால் கப்,
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி,
பனை வெல்லம் - இரண்டு கப்,
இளநீர் - அரை கப்.
செய்முறை:
முதலில் குதிரைவாலியுடன் கார் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கி வைத்துப் புளிக்க வைக்கவேண்டும்.
புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்கவிடவும். பனை வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும். சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி- பனை வெல்ல ஆப்பம் தயார்.
மசாலா ஆப்பம்
தேவை:
ஆப்ப மாவு – 2 கப்
எண்ணெய் – தேய்க்க
அரைக்க:
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
சோம்பு/பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மேலே கொடுப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதை ஆப்ப மாவுடன் சேர்க்கவும்.
ஒரு தவாவை சூடாக்கவும். அதன் பின்பு ஒரு பெரிய கரண்டியில் மாவை எடுத்து தவாவில் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேகவைக்கவும். சில நிமிடங்கள் கழித்து திருப்பவும். பிறகு மீண்டும் 1-2 நிமிடங்கள் வேகவைக்கவும். சுவையான மசாலா ஆப்பம் தயார்.