

பிஸ்தா பர்பி
தேவை:
பிஸ்தா பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை நன்கு வதக்கி ஆறவைத்துப் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். பிறகு, சர்க்கரையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
பிறகு ஒரு தட்டை எடுத்துக்கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக்கொள்ளவும். சர்க்கரை பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக்கிளறவும். ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து தேவையான அளவு நெய்யை விட்டுக் கிளறவும்.
பிறகு, நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாய்ப் பரப்பவும். சூடு ஆறியதும் வில்லைகள் போடவும். சுவையான பிஸ்தா பர்பி தயார்.
பிஸ்தா பாயசம்
தேவை:
பிஸ்தா(உப்பில்லாதது) - 100 கிராம்
துருவிய பிஸ்தா - ஒரு டீஸ்பூன்
ரவை - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 10 டீஸ்பூன்
பசும் பால் - அரை லிட்டர்
கன்டெண்ஸ்ட் மில்க் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பிஸ்தா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
50 கிராம் பிஸ்தாவுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பிஸ்தாவை சிறுதுண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து நெய் சேர்த்து, நறுக்கிய பிஸ்தாவைச் சேர்த்து வதக்கவும்(லேசாக வறுத்தால் போதும்). இதில் ரவையைச் சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும். பின்னர் பால், அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து, ரவை நன்றாக வேகும்வரை மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் கன்டெண்ஸ்ட் மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பாயசம் கெட்டியானதும் பிஸ்தா எசன்ஸ் சேர்த்து இறக்கவும். நறுக்கிய பிஸ்தா தூவிப் பரிமாறவும். சுவையான பிஸ்தா பாயாசம் தயார்.
பிஸ்தா அவல் புட்டு
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் - 1 கப்
வெல்லம் - 1/2 கப் (பொடித்தது)
தேங்காய் துருவல் - 1/2 கப்
பிஸ்தா - 1/4 கப் (பொடியாக்கியது)
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் அவல் சேர்த்து, மிதமான தீயில், மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நெய் விட்டு, பிஸ்தா சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைக்கவும்.
அதே கடாயில், வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்ததும், வடிகட்டி, மீண்டும் கடாயில் ஊற்றி, பாகு பதம் வந்ததும், அரைத்த அவல், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையை நன்கு கிளறி, அதனுடன் பிஸ்தா தூள் சேர்த்து, அடுப்பை அணைத்து, பரிமாறவும். சுவையான பிஸ்தா அவல் புட்டு ரெடி.