வெற்றி வேண்டுமா உனக்கு? அப்படியெனில் நீ யாருக்காகவும் எதற்காகவும் முரண்படாமல் போய்க்கொண்டே இரு. சூழல்களுக்குத் ஏற்ப உன்னை மாற்றிக்கொள்ள கற்றுக்கொள். அனைவரையும் ஏற்று அனுசரி. அப்போதுதான் உன்னால் சாதிக்க முடியும் என்றெல்லாம் அறிவுரையை கேட்டிருப்போம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
"எல்லா நல்ல மனிதர்களும் இந்த உலகத்திற்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றி அமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் எல்லாவிதமான முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும் அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தை தான் நம்பி இருக்கின்றன" இது சாதாரண கிராமத்தில் பிறந்து தனது புதுமையான அறிவியல் திறன்களால் ஏவுகணை நாயகனாக சாதித்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமின் கருத்து.
நம் லட்சியத்தை நிர்ணயிக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு தந்து அவர்கள் மனம் புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு வகையில் சரிதான். ஆனால் மிகப் பெரிய லட்சியங்களை அடைவதற்கோ இந்த முரண்பாடற்ற புரிதல் நிச்சயம் சரிப்பட்டு வராது.
செக்குமாடு போன்ற வாழ்க்கையில் உழலும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாய் சிந்தித்து மாற்று வழியை கண்டுபிடித்து அதன் வழியே செல்லும் வெற்றியாளர்களின் செயல் முரண்பாடாகவே மற்றவர்களுக்கு தெரியும். வெற்றியாளர்களை கவனித்து பாருங்கள். பலரும் இந்த சமூகம் விரும்பாத, சமூக மாற்றத்துக்குரிய முரண்பாடான விஷயத்தை அவர்கள் கையாண்டுதான் வெற்றி அடைந்திருப்பார்கள். அவர்கள் இந்த வழமையான சமூகத்தில் இருந்து அல்லது தங்கள் குடும்பத்தினருடன் முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தாத்தா பாட்டி காலத்திலிருந்து வரும் எதையும் மாற்றாமல் அப்படியே ஏற்றுக் கொள்கின்ற மனோ நிலையை மட்டுமே கொண்டுள்ளனர். அவைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து அதற்கு எதிராக புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்துபவரை நல்லவர் என்றும் யாரும் சொல்வதில்லை. குறிப்பாக சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புவதில்லை. காரணம் முரண்பாடுகள் அன்றாட வாழ்வின் நிம்மதியை குறைத்து விடுகிறது என்ற தவறான கருத்து.
லட்சியம் எதுவும் இன்றி இயங்குபவர்களுக்கு வேண்டுமானால் இந்த கருத்து சரியாகப்படலாம். ஆனால் வாழும்போதே ஒரு குறிக்கோளுடன் வாழ்பவர்களுக்கு அல்லது சாதித்துக்காட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மனோபாவம் நிச்சயம் பொருந்தாது.
வாழ்க்கையில் சாதித்தவர்கள் சரித்திரங்களை படைத்தவர்கள் எல்லாம் தாங்கள் வாழ்ந்தபோது தங்களை சுற்றி உள்ள மனிதர்களின் வாழ்க்கைக்கு எதிராக முரண்பட்டே இருந்திருப்பார்கள். அவர்கள் மக்களுக்காக மகத்தான லட்சியங்களை முன்வைத்து அதை நோக்கி செயல்பட்டவர்களாகவே இருப்பார்கள். தங்கள் லட்சியத்துக்கு எதிராக வருபவர்களை எதிர்க்கும் முரண்பாடான செயல்களையும் அவர்கள் புரிந்துள்ளனர். முரண்படுகிற துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே உயர்ந்த நிலைக்கும் செல்ல முடியும். உலகத்தின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற முடியும்.