வன்மத்தை அன்பால்தான் அழிக்க முடியும்!

Only love can destroy hatred!
motivational articles
Published on

ன்முறை என்பது பெரும்பாலும் சேகரித்து வைக்கப்பட்ட உணர்ச்சிகள் பீய்ச்சியடிக்கிற நிகழ்வுதான். நம் எல்லோருடைய இதயத்திலும் வன்முறையின் விதைகள் விழுந்திருக்கின்றன. விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.

நாம் எத்தனையோ முறை மனத்திலேயே முஷ்டியை உயர்த்துகிறோம். இதயத்திலேயே இன்னொருவரைத் தாக்குகிறோம்.

உள்ளத்துக்குள்ளேயே பலரை உயிர் நீக்கிப் பார்க்கிறோம். நம் நெஞ்சில் இருக்கும் வன்மம் கைகளின் வழியாக வெளிப்படாதவரை நாம் மென்மையானவர்களாகவே இருக்கிறோம்.

இருத்தலில் எதையுமே மறைத்துவைக்க முடியாது. நாம் விதைத்த வன்மம் வேறொருவர் வாய் வழியாக, மணிக்கட்டு வழியாக, அவர் தாங்கிய ஆயுதம் வழியாக வெளிப்படுகிறது. எனவே எல்லா வன்முறை நிகழ்வுகளுக்கும் நமக்கும் குற்ற உணர்வு ஏற்படத்தான் வேண்டும்.

ஆனால் அது மனசாட்சியால் ஏற்படுகிற வருத்தமாக இல்லாமல், உள்ளுணர்வால் உண்டாகிற உறுத்தலாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

நாம் விஷம் தடவிய எண்ணங்களை தேன் தடவிய சொற்களால் எப்படி எல்லாம் மறைத்து வாழ்ந்து வருகிறோம். வன்மம் என்பது மனிதர்களிடம்தான் நிகழ்த்தப்பட வேண்டும் என்கிற உணர்வு மட்டும் அல்ல. ஒரு பேனா மூடியை வலுவாகத் திறப்பதுகூட வன்முறைதான்.

நம் காலணியை வேகமாகச் சுவரில் மோதக் கழற்றி எறிவதும் நாற்காலியைத் தரை சிராய்க்கும்படி இழுப்பதுகூட வன்முறைதான்.

பக்கத்து வீட்டினர் செவிப்பறை சேதப்படும்படி நம் இசையின் சுருதியைக் கூட்டுவதும் வன்முறைதான்.

குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பல விஷயங்கள், அவற்றின் குழந்தைத்தனத்தைத் திருடுகிற வன்முறையாகவே இருக்கின்றன.

நம் சரித்திரம் அன்பை உணர்த்தியவர்களை அமைதியைக் கற்றுத் தந்தவர்களை மென்மையை மேவியவர்களைப் பற்றிய மென்மையான பதிவாக இல்லாமல் தலைகளை வெட்டிச் சாய்த்தவர்களையே சாதனையாளர்களாகக் கவுரவிக்கும்படி போதிக்கின்றன.

ஓஷோ ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அவருக்குத் தேர்வில், "செங்கிஸ்கான் எப்போது பிறந்தார்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நீண்ட கால உறவுக்கு அவசியமானது எது தெரியுமா?
Only love can destroy hatred!

"செங்கிஸ்கான் பிறக்காமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று அவர் பதில் எழுதினாராம்.

வீரம் வெட்டுவதில் இல்லை, கட்டுவதில் இருக்கிறது. வீழ்த்துவதில் இல்லை, வாழ்த்துவதில் உள்ளது. தாக்குதலில் இல்லை. ஆக்குவதில் இருக்கிறது. உடைப்பதில் இல்லை உண்டாக்குவதில் உள்ளது. நொறுக்குவதில் இல்லை. உருவாக்குவதில் அடங்கியிருக்கிறது.

வீரம் அடுத்தவர்களை வெல்வதில் இல்லை. மற்றவர்களை வெல்வது எளிது தன்னைத்தானே வெல்ல முடிந்தவனே வீரனாக கருதப்படுவான்.

நாம் வன்மத்தை அன்பால்தான் அழிக்க முடியும் அன்பு பிரவாகமாக பெருக்கெடுக்கும்போது இதயத்தில் படிந்த கோபத்தின் சுவடுகள் கூட தெரியாதபடி அவை அழிந்து போகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com