
பல அவமானங்களைக் கடக்கும் போதுதான் வெற்றி என்னும் திசை இருக்கும் இடம் தெரியும். வெற்றியின் ருசியும் தெரியும். வாழ்க்கையில் சவால்களை எதிர்க்கொள்ள பழகவேண்டும். தடைகள், தோல்விகள், அவமானங்கள் என எவ்வளவோ சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்க்கொள்ள துணிச்சல் வேண்டும்.
சவால்களை எதிர்க்கொண்டு அவற்றை கடந்து செல்வதன் மூலம் நம்மால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். கனவுகளை நனவாக்க ஓடும்பொழுது, லட்சியத்தை நோக்கிச் செல்லும் பொழுது முயற்சியும் விடாமுயற்சியும் கொண்டு முன்னேற துடிப்பவர் களுக்குத்தான் வெற்றி கிடைக்கும்.
எதிர்க்கொள்ளும் அவமானத்தை வினையூக்கியாக வைத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்பட வாழ்வில் முன்னேறலாம். எப்பொழுதுமே வாழ்க்கையில் நடக்கும் ஒரு அவமதிப்பான செயல்தான் பலரையும் பெரிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பின் அப்படி அவமானப்படுத்தியவர்களே உங்களை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது தான். நம்மை அவமானப்படுத்தியவர்கள் நாம் அதனால் புண்படுவோம் என்பதைத் தெரிந்தேதான் அந்த செயலை செய்திருப்பார்கள். அவர்கள் முன் நன்கு வாழ்ந்து காட்டுவதுதான் அதற்கு சரியான பதிலடியாக இருக்கும்.
அவமானங்களை அனுபவமாக பார்க்க ஆரம்பித்து விட்டோமேயானால் நாம் நினைக்கும் நிலையை எட்டலாம். உலகில் சாதித்தவர்கள் அனைவருமே அவமானங்களை சந்தித்துதான் மேலே வந்திருக்கிறார்கள். அவமானப்பட்டு விட்டோமே என்ற எண்ணத்தில் ஏற்படும் உந்துதல் காரணமாக முயற்சியுடன் கடினமாக உழைத்து நல்ல நிலையை அடைகிறார்கள். சொல்லப்போனால் அவமானம் யாரையுமே விட்டு வைத்ததில்லை.
எனவே அவமானப்பட்டு விட்டோமே என்ற எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி நம் முழு கவனத்தையும் செலுத்த வாழ்க்கையில் உயர்வுகிட்டும். நம் மேல் நம்பிக்கை பிறக்கும். நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும்.
ஒருவரது வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் அவமானங்களும், தோல்விகளும்தான் அவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும். எதிர்கொள்ளும் அவமானங்கள் நம்மை லேசில் தூங்க விடாது. மனதை அலைக்கழித்துக்கொண்டே இருக்கும். எப்படியாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும். அவமானங்களையும் தோல்விகளையும் பற்றி அதிகம் பேசப்படுவதற்கு காரணம் அவை வாழ்க்கையின் உண்மை சவால்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.
வாழ்க்கையில் பட்ட அவமானங்களை வெற்றிக்கு படிக்கற்களாக அமைத்துக் கொள்ளலாம். பட்ட அவமானத்தை நினைத்து வருந்தி சோர்ந்து விடாமல் லட்சியத்துடன் திட்டமிட்டு அதை அடைய முழு மனதுடன் வைராக்கியமாக செயல்பட உயர்ந்த நிலைக்கு செல்லலாம்.
நம்மை அவமானப்படுத்தியவர்கள், உதாசீனப் படுத்தியவர்கள் நம்மை கண்டு, நம் வளர்ச்சியைக் கண்டு நடுங்கி ஒதுங்கி நிற்பார்கள். புறக்கணிப்புகள், அவமானங்கள், துரோகங்கள், தோல்விகள் இவற்றால் ஜெயித்தே தீர வேண்டும் என்கின்ற வெறி உள்மனதில் ஏற்படும். அதுதான் உந்து சக்தியாக திகழ்ந்து வாழ்வில் நம்மை உயர்த்தும்.
எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம் என்ற உணர்வைத்தரும் அவமானங்களும், தோல்விகளும் நம்மை வீழ்த்தாது மாறாக உத்வேகத்தையே தரும். உண்மைதானே நண்பர்களே!