அபிப்ராயங்களே முக்கியம். இதைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

திறமை என்பது விரல்கள்போல். அதற்கான அங்கீகாரம் விரல்களில் மின்னும் மோதிரம் போல். இன்றைக்குப் பட்டங்கள், பரிசுகள் என்கிற மோதிரங்கள் வைத்திருக்கும்  சிலருக்கு பாவம் விரல்கள் இல்லை.

சிலர் பட்டங்களை விடவும் பன்மடங்கு  மேன்மையான வர்கள். அவர்களுக்கு வாய்த்த விரல்கள் மோதிரங்களை விட அழகானவை. வெகு சிலரே பட்டங்களுக்கு முற்றிலும் பொருத்தமானவர்கள். தன் அளவு இல்லாத மோதிரத்தை நூல்சுற்றி மாட்டிக் கொள்கிற மாதிரி பலரது கால் சுற்றிப் பட்டம் கட்டிக்கொள்கிறார்கள்.

பிறரது அங்கீகாரத்திற்கு ஏங்கும்  திறமைசாலிகள் விரல்களை நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும். மோதிரங்களுக்காக 

ஏங்காதீர்கள். நம்மைப் புரிந்துகொள்வது, அங்கீகரிப்பது, பாராட்டுவது இவையெல்லாம் சமூகத்தின் பொறுப்பு. கலைஞர்கள் ஓவியர்கள்  சிந்தனையாளர்கள் இப்படிப் பல துறைகளில் வளரும் இளைய தலைமுறையினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களப் பற்றிய அங்கீகாரமே உங்கள் அஸ்திவாரம். பிறரது அங்கீகாரம் வெறும் அலங்காரமே.

மகாகவி பாரதியை அவரது சமகாலத்தில் மகாகவியாக யாரும் அங்கீகரிக்கவில்லை. பிழைக்கத் தெரியாதவர் என்பதே சமூகம் அவர் மீது வைத்திருந்த அபிப்ராயம். ஆனால் பாரதி தன்மீது வைத்திருந்த அபிப்ராயம் முற்றிலும் வேறு. பிறரது அங்கீகாரத்தை விட அவரது அபிப்ராயங்களே  ஜெயித்தது.

தமிழில் செய்யுள் பாடிய  தமிழ்ப் பண்டிதர்கள் பாரதியின் பாடல்களை பாமரத்தனமானவை என்று கூறியபோது சுவை புதிது, பொருள் புதிது வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை என்று பாரதி தன் பாடல்களைப் பற்றிப்  புரிந்து வைத்திருந்தார். பிறர் பாராட்ட வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால் பாராட்டும்போது எதிர்க்காதீர்கள்.  மாலைகளை எதிர்பார்த்து தலை தாழ்ந்து நிற்க வேண்டாம். ஆனால் மாலைகள் வரும்போது தலைகுனிந்து வாங்க மறுக்க வேண்டாம். நமமுள் கனிந்துள்ள திறனைப் பிறர் உள்ளது உள்ளபடி ஒருபோதும் அளக்க முடியாது. எனவே பிறரால் நம்மை ஒருபோதும் சரியாக அங்கீகரிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
இந்திய மணப்பெண்களின் 4 தனித்துவமிக்க ரவிக்கை வடிவமைப்புகள்!
Motivation image

நோபல் பரிசு பெற்ற வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் பற்றித் தெரியுமா.? அவரது குடும்பம்  கூட்டுக் குடும்பம். ஐம்பது அறுபது பேர்கள் உள்ள அக்குடும்பத்தில் பிள்ளைகளின் பிறந்த நாளைக்  கொண்டாடும்  முறையே புதுமையானது. ஒவ்வொரு பிள்ளைபெயரிலும் ஒரு நோட்டுப் புத்தகம் இருக்கும் அதில் அந்தக் குடும்பத்துப் பெரியவர்கள் பிள்ளைகளைப்பற்றித் தங்கள் பாராட்டை, விமர்சனத்தை கருத்தைப்  பற்றி எழுதுவது வழக்கம். ரவீந்திரநாத் பிறந்த நாள் அன்று அவர் பாட்டி எழுதிய வரிகள் என்ன தெரியுமா.? "ரவியைப் பற்றிச் சொல்ல உருப்படியாக எதுவும் இல்லை. அவன் எதிர்காலம் பற்றி நினைத்தால் கவலையாக இருக்கிறது. பெரிய ஆளாக வருவான் என்று தோன்றவில்லை. மற்ற பிள்ளைகளைப் போல் புத்திசாலியாக இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.' என்று எழுதியிருந்தார். இன்று மற்ற பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. உருப்பட மாட்டான் என்று பாட்டி எழுதியவர்தான் உலகின் புகழ்பெற்ற உருப்படியானார். இரண்டு நாடுகளுக்குத் தேசிய கீதம் தந்த  ஓரே கவிஞர் என்ற தனிப்புகழ் அவருக்கு மட்டுமே உண்டு.

எனவே பிறரது அங்கீகாரங்கள் பெரிய விஷயமல்ல. உங்களைப் பற்றிய  உங்களது அபிப்ராயங்களே  முக்கியம். அதை உணர்ந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com