
வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு அதன் விளைவுகளும், அவ்விளைவுகள் தோற்றுவிக்கக் கூடிய காலநேரங்களும் தெளிவாகத் தெரிகின்றன. சதுரங்கப் பலகையில் காய்களை கணக்காக நகர்த்துவதுபோல், அவர்களால் தங்கள் திட்டங்களைக் காலத்தில் நகர்த்தி முடிக்கமுடிகிறது.
உற்று கவனிப்பதால், உலகையே மாற்றியவர்களும், தங்களது வாழ்க்கையை மாற்றியவர்களும் ஏராளமானோர் உள்ளனர். இமயமலையில் பனிவிழுந்து கொண்டிருக்கும் அழகான வேளையில் ஒரு புத்த துறவி ஒரு மரத்தைப் பார்க்கிறார். ஒரு கிளையின் மீது பனித்துளிகள் வெண்ணெய்போல் விழுந்து கிளையை அழுத்திக்கொண்டே போகிறது. பனியின் பாரம் தாங்காமல் கிளை தாழ்கிறது முறிந்துவிடும் என்று துறவி எண்ணியதை நேரத்தில் தாழ்ந்த கிளையிலிருநது பனிப்பொதி நழுவி கீழேவிழ கிளை நிமிர்ந்து நிற்கிறது.
இக்காட்சியைப் பார்த்த துறவிக்கு ஒரு எண்ணம் பளிச்சிடுகிறது. அதிக வலுவுள்ள ஒருத்தன் தாக்க வரும்போது, அந்த வலுவை வைத்தே அவனைக் கீழே தள்ளிவிடுவது எளிதாக இருக்குமே?. இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் எதிரியை அவன் வலுவையும் வேகத்தையும் வைத்துத் தாக்கும் "ஜுடோ"சண்டைப் பயிற்சியைத் தோற்றுவித்தார். ஆப்பிள் பழம் கீழே விழுவதை கண்ட நியூட்டன் புவிஈர்ப்பை கண்டுபிடித்தார்.
வாழ்க்கையில் அன்றாடம் காணும் பொருள்களையும், சந்திக்கும் அனுபவங்களையும் நுட்பமாக கவனிக்கும் ஆற்றலை மட்டும் நாம் பெற்றால். எவ்வளவோ வாய்ப்புகள் வழியிலிருக்கின்றன. ஓர் அலுவலகத்தில் சேர வேண்டுமா? பயிற்சியும் தருகிறோம். வேலையும் வாங்கித் தருகிறோம் "கணிப்பொறி கற்றுக் கொள்கிறீர்களா?", "சரளமாக ஆங்கிலம் பேசவேண்டுமா?" இப்படி பல விளம்பரங்கள் பத்திரிகையில் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு முயற்சியும் இல்லாமல் வேலை இல்லை என்று ஜெபம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி யாராவது பயிற்சி பெற்று வேலைக்குச் செல்பவரைப்பார்த்து "நல்ல அதிர்ஷ்டக் கட்டை"என்று பெருமூச்சு விடுவீர்கள். தவறு யார் மேல்?
முயற்சி உள்ளவரை பிடித்துக் கடலில் தள்ளினாலும் கூட முத்தெடுக்கத்தான் முயற்சிப்பார் என்று சொல்வார்கள். நஞ்சை அருந்தி மடிய வேண்டிய சூழ்நிலையில் பக்கத்திலிருந்த கைதியிடம் ஒரு புதிய செய்தியைக் கற்றுக்கொண்டதாக சாக்ரடீஸ் பற்றிய செய்தி கூட உண்டே. வழிநெடுக வாய்ப்புகள். ஆனால் விழிகள் மட்டும் மூடி இருக்கின்றன
கொஞ்ச நேரம் உட்கார்ந்து நேர்மையான முறையில் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வழியில் என்னென்ன வேலைகள் செய்து பிழைக்க முடியும் என்று நிதானமாக சிந்திக்க ஆரம்பியுங்கள். வேலை இல்லை என்று நீங்கள் புலம்புகிறீர்கள். ஆனால் வேலை செய்ய நல்ல ஆட்கள் இல்லையென்று எவ்வளவு பேர்கள் புலம்புகிறார்கள் தெரியுமா? எங்கே கோளாறு தெரியுமா?. படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டும்.
அரசாங்க வேலை அதுவும் மத்திய அரசாக இருந்தால் நல்லது கைநிறைய சம்பளம். மேனிலைப் கல்வி இளைஞர்கள் நினைப்பது இப்படித்தான். தற்போது கார்ப்பரேட்வேலைக் கனவுகள் அதிகம் உள்ளது. கனவு உலகில் மட்டுமே வாழ நினைக்காமல் தாங்களே பல வேலைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மனது வைத்தால் இது சாத்தியம்தான்.