
தோல்வி கண்டவுடன் ஒருவன் எப்படி நடந்து கொள்ளுகிறான் என்பதைக் கண்டறிந்து அவனுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைச் சுலபமாக கணித்துவிட முடியும். சிலர் தோல்வி கண்டவுடன் பயந்து மூலையில் முடங்கிக் கொண்டுவிடுவார்கள். சிலர் கலக்கத்தின் விளக்கப் பொருளாகக் காட்சி தருவார்கள். சிலர் பரிதாபத்தின் மொத்த உருவமாக விளங்குவார்கள்.
இன்னும் சிலர் புதிய முயற்சிகள் செய்வதையே விட்டு விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பிரகாசமான எதிர்காலத்தை நிச்சயம் சந்திக்கமாட்டார்கள்.
இப்படி நடந்து கொள்ளுவதற்கு மாறாகவே சிலர் தோல்விகள் தங்களுடைய திறமையை சோதிக்க கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பரீட்சைகள் என்று நினைத்து மிகவும் பாடுபட்டு உழைத்து தோல்விகளை வெற்றிகளாக மாற்றிக் காண்பிப்பார்கள்.
தோல்விகளை சவால்களாக எடுத்துக் கொள்ளுபவர் களுக்குதான் ஒளிமயமான எதிர்காலம் அமையும்.
"நான் ஏற்கனவே கண்ட தோல்விகள்தான் இப்போது நான் கண்டு வரும் வெற்றிக்கு வழி வகுத்திருக்கின்றன' என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.
தோல்வி ஒருவனுக்கு திறமையில்லை என்பதை எடுத்துக் காட்டுவதில்லை. ஆனால் வேறு ஒரு புதிய வழியைப் பின்பற்ற வேண்டுமென்று அது எடுத்துக்காட்டுகிறது.
'இந்த காரியத்தை உன்னால் செய்ய முடியாது' என்று தோல்வி சொல்லுவதில்லை. அதற்கு மாறாக அந்த காரியத்தை செய்து முடிக்க இன்னும் கொஞ்சகாலம் பிடிக்கும் என்று கூறுகிறது.
தோல்வி என்பது தற்காலிகமானது. அது நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. தோல்வி என்பது நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதில்லை. அது புதிதாக ஒன்றை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தோல்விகள்தான் ஒருவனிடமிருக்கும் குறைபாடுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பைத் தருகின்றன. தோல்வி ஏற்பட்டுவிட்டால் அனைவரும் ஏளனமாக நினைப்பார்கள் என்று பலர் பயப்படுகிறார்கள்.
வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்பவர்கள் அனைவரும் பலமுறை தோல்விகளைக் கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும்.
'எந்த முயற்சியும் செய்யாதவனுக்குத்தான் தோல்வி என்பது கிடையாது' என்று வாட்லி என்ற அறிஞர் கூறியிருக்கிறார். 'நம்முடைய பெருமை நாம் தடுக்கியே விழாமல் சென்று கொண்டிருப்பதில் இல்லை. தடுக்கி விழுந்த போதெல்லாம் அமைதியுடன் எழுந்திருந்து மீண்டும் உறுதியுடன் நம் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில்தான் இருக்கிறது' என்று கோல்ட் ஸ்மித் என்ற அறிஞர் கூறியிருக்கிறார்.
நீங்கள் கீழே விழுந்தவுடனே. ரப்பர் பந்தைப்போல் மீண்டும் குதித்தெழுந்து முன்பு செய்த வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஆனால் கீழே விழுந்தவுடன் எழுந்திருக்க எந்த முயற்சியும் செய்யாமல் படுத்துக்கொண்டே கண்ணீர்விடும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் அனைவரும் எள்ளி நகையாடவே செய்வார்கள்.