
சில நேரங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு பலன் இல்லாததுப்போல தெரியலாம் அல்லது அதன் பலன் நம் கண்களுக்கு புலப்படாமல் போகலாம். அதற்காக எடுத்த முயற்சியை ஏன் வீண் என்று நினைக்க வேண்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கான பலன் நம்மை கண்டிப்பாக வந்து சேரும். இதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு பாட்டி பராமரித்து வந்த பூந்தோட்டத்தை தற்போது அவரது பேத்தி பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும் கார்டனிங் மிகவும் பிடிக்கும் என்பதால் மிகவும் கண்ணும் கருத்துமாக செடிகளைப் பார்த்துக்கொண்டார். இன்னும் விதவிதமான செடிகளை வளர்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் புதிதாக ஒரு செடியை வாங்கினார்.
அந்த செடியை தன் வீட்டின் பின்புறமாக இருக்கும் கால்சுவர் மீது வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி ஸ்பெஷலாக பார்த்துக்கொண்டதால், அந்த செடி வேகமாக வளரத்தொடங்கியது. ஆனால், ஆறு மாதத்திற்கு பிறகும் அந்த செடியில் ஒரு பூக்கூட பூக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு எரிச்சலாகி விடுகிறது.
‘இவ்வளவு முயற்சியும், உழைப்பும் போட்டும் ஒரு பூக்கூட பூக்காத இந்த செடியே வேண்டாம்’ என்ற எண்ணத்திற்கு அந்த பெண் வந்துவிட்டார். அதன் பின்னர் அவரின் பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து சொல்கிறார், ‘இந்த கல் சுவர் மீது இந்த அழகான பூக்களை பார்க்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.
இதைக்கேட்ட அந்த பெண், கல்சுவரின் இன்னொரு பக்கத்தை பார்ப்பதற்காக ஓடி வருகிறார். அங்கே சென்று பார்த்தால், கல் சுவர் முழுவதும் படர்ந்து அத்தனை அழகிய மலர்கள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தது. அவள் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் பலன் கிடைத்திருந்தது.
இந்தக் கதையில் நடந்தது போலத்தான், ஒருவேளை நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்காமல் இருக்கலாம் இல்லையென்றால் அந்த பலன் இன்னும் உங்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதற்காக எடுத்த முயற்சிகளுக்கு பலனே கிடைக்கவில்லை என்று எண்ண வேண்டாம். கண்டிப்பாக பலன் கிடைக்கும். அதையும் நிச்சயமாக பார்ப்பீர்கள். இதை புரிந்துக் கொண்டு செயல்பட்டால், வாழ்வில் வெற்றி பெறலாம். முயற்சித்துப் பாருங்கள்.