வாழ்ந்துகாட்ட வேண்டும் உலகில் மனிதனாக வேண்டும்! என்ற கவிஞரின் பாடல் வரிகளுக்கேற்ப வாசல்தேடி உலகம் நம்மிடம் வரவேண்டும் , அதற்கு நமக்குத்தேவை தைரியம், எதிா்மறை சிந்தனையை முறியடிக்கும் மனோபலம், தோல்வி கண்டு துவளாமை! நோ்மைக்கு அஞ்சாமை, பயம் இல்லாத மனோசக்தி !
அதைவிட ஆற்றலை வெளிப்படுத்தும் குணம், கோழையாகும் தன்மையை அறவே அழித்தல், இப்படி பல விஷயங்களை அடுக்கலாம் ! எதுவும் நம்கையில்தான் உள்ளது!
"வைராக்கியமே நமக்கான பொிய சொத்து" தோல்வி வந்தால் துவண்டுவிட வேண்டும் என்று எந்த தர்மத்தில் உள்ளது? நம்மிடம் இருக்கும் பயமே நமக்கு எதிாி! தாழ்வு மனப்பான்மையே அதைவிட பொிதிலும் பொிதான எதிாி, இவையெல்லாம் கடந்து போகவேண்டுமே!
தோ்வுகளில் தோல்விகண்டால் பெற்றோா்களுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தீராத மன உளைச்சலைத் தந்துவிட்டுப் போவதில் என்ன பயன்? அதேபோல வரதட்சணைக்கொடுமை!அது ஒரு பஞ்சமாபாதக செயல், பையனுக்கு பெண் கிடைத்தால் போதும், முடிந்ததை செய்யுங்கள் என ஆசை வாா்த்தை கூறவேண்டியது. பின்னர் திருமணம் முடிந்ததும் வரதட்சணை தரவில்லை என குத்துவாா்த்தை பேசுவது!
இது என்ன நியாயம் ?
திருமணம் ஆன மூன்று மாதத்திற்குள் கணவன், மாமியாா், மாமனாா், கொடுமை தாங்காமல் இளம் பெண் காாில் அமர்ந்தபடியே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறதே!
மேலும் ஒரு சம்பவமாய் தோ்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த தனது மகளை தகப்பனாா் அடித்தே கொன்ற சம்பவமும் அறங்கேறி உள்ளது... இது என்ன இவ்வளவு மூா்க்கத்தனம்?
பொதுவாகவே தோல்வி கண்டு துவண்டு போய் அதற்கு தற்கொலைதான் தீா்வு என்ற நிலைபாடு அறவே மாறவேண்டும், பொதுவாகவே எதையும் எதிா்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இருக்கவேண்டும்.
எந்த பாலினமாக இருந்தாலும் சரி சவால்களை எதிா்கொள்ளும் திறன் நமக்கு இருக்கவேண்டும், பெற்றோா்களும் குழந்தைகளை வளா்க்கும்போதே தைரியமாக எதையும் எதிா்கொள்ளும் விதமாக துணிச்சலாக வளா்க்க வேண்டுமல்லவா? அதுதானே நல்லது !
அதேபோல தோ்விலோ அல்லது வாழ்க்கையிலோ தோல்வியோ அல்லது இடர் பாடுகளோ பாலியல் ரீதியான தொல்லைகளோ வந்தால் அதை எதிா்கொள்ளும் துணிச்சல் நமக்கு வரவேண்டும் . நமது தைாியத்தால் சமுதாயத்தில் வளா்ந்து வரும் குற்றங்களை குறைக்கலாம் !
"காற்றை எதிா்த்துதான் பட்டம் பறக்கிறது என்பதை நினைவில் கொண்டு எதிா்ப்பினைக்கண்டு அஞ்சாமல் தொடர்ந்து செயல்படவேண்டும்" என ஹாமில்டன் மர்பி என்ற அறிஞர் சொல்லியுள்ளாா் அதன் அடிப்படையில் எதிா்ப்பினைக்கண்டு அஞ்சவோ தோல்வியைக்கண்டு துவளவோ கூடாது!
இன்றைய இளய தலைமுறை சிங்கக்குட்டிகளே! எந்த சங்கடங்கள் வந்தாலும் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் தோல்வி என வந்துவிட்டால் அதற்கு தற்கொலை ஒரு தீா்வல்ல என்பதை புாிந்துகொண்டு சவால்களை முறியடித்து சிங்கப்பெண்ணாய் சீறும் சிங்கப் பையனாய் வீருநடை போடுங்கள்!தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து பாருங்கள் நம்மால் முடியாதது எதுவும் இல்லை !
(குறிப்பு : இந்த கட்டுரை விழிப்புணர்வுக்காக மட்டுமே. மனநலப் பிரச்சனை இருந்தால், தயவு செய்து 104 அல்லது 14416 எண்ணிற்கு அழைத்து உதவி பெறுங்கள்.)