
இந்த உலகத்தில் கள்ளம் கபடமற்ற தூய அன்பைக் கொடுக்கக் கூடியவர்கள் குழந்தைகள் மட்டுமே. குழந்தைகளுக்கு தேவையானது நாம் அவர்களுக்கு கொடுக்கும் அன்பும், அரவணைப்பும், கவனிப்புமே தவிர நாம் கொடுக்கும் விலை மதிப்பற்ற பரிசுப்பொருட்கள் கிடையாது. இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் நளினி என்ற பள்ளி ஆசிரியர் தன்னுடைய மாணவர்களிடம், ‘கடவுளிடம் நான் கேட்கும் வரமும் அதற்கான காரணமும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னார். மாணவர்கள் சமர்ப்பித்த கட்டுரையில் ஒரு கட்டுரை மட்டும் நளினியை மனம் நெகிழ வைத்தது. அந்தக் கட்டுரையை அவர் தன்னுடைய சக ஆசிரியரான மாலதியிடம் கொடுத்து வீட்டிற்கு சென்றதும் படிக்க சொன்னார்.
வீட்டிற்கு சென்று அந்த கட்டுரையை படித்த மாலதி அழத்தொடங்கினார். அப்போது தற்செயலாக அந்த அறைக்கு வந்த அவருடைய கணவர், ‘ஏன் அழுகிறாய்?’ என்று விசாரிக்க,
"என் சக ஆசிரியரின் மாணவி எழுதிய கட்டுரையைப் படித்து தான். நீங்களே இதை படித்துப் பாருங்கள்" என்று கூறினாள் மாலதி. அந்தக் கட்டுரையில் அந்த மாணவி எழுதியிருந்தது,
‘கடவுளே! நீங்கள் எனக்கு வரம் தரவிருந்தால் தயவு செய்து என்னை ஒரு செல்போனாக மாற்றுங்கள். என் குடும்பத்தினருக்கு நான் முக்கியமானவளாக மாற வேண்டும்.
என் பெற்றோரின் முழு கவனமும் செல்போனின் மீது இருப்பதுப்போல என் மீதும் இருக்க வேண்டும். என் அப்பா வேலையில் இருந்து வீட்டிற்கு வரும்போது எவ்வளவு சோர்வாக இருந்தலும் அவர் செல்போனுடன் நேரம் செலவிடுவதுப்போல என்னுடனும் நேரம் செலவிட வேண்டும். என்னுடைய அம்மா சோகமாக இருக்கும் போது செல்போனை பற்றிக் கொள்வதைப்போல என்னையும் புறக்கணிக்காமல் பற்றிக்கொள்ள வேண்டும்.
என்னுடைய சகோதரர்கள் செல்போனுக்காக சண்டைப்போட்டுக் கொள்வதைப்போல என்னுடன் நேரம் செலவழிக்க போட்டி போட வேண்டும். என் குடும்பத்தினர் மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு என்னுடன் நேரம் செலவிட வேண்டும். செல்போன் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அதை உடனேயே கவனிக்கிறார்கள். அதைப்போலவே நானும் சோர்வாக இருக்கும் போது என்னையும் உடனேயே கவனிக்க வேண்டும். மொத்தத்தில் என்னை சுற்றியுள்ள அனைவரையும் நான் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடவுளே! நான் எதையும் அதிகமாக கேட்கவில்லை. என்னை செல்போனாக மாற்றுங்கள் போதும்’ என்று அந்த கட்டுரையில் இருந்தது.
இதைப் படித்ததும் அந்த கணவர், ‘ஐயோ! பாவம் அந்த குழந்தை. மோசமான பெற்றோர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது’ என்று சொல்லி வருந்தினார். மாலதி அவரைப் பார்த்து, ‘இந்த கட்டுரையை எழுதியதே நமது மகள் தான்!' என்றாள்.
குழந்தைகள் நம் அன்பை உணர வேண்டுமே தவிர அதற்காக ஏங்கக்கூடாது. இதைப் புரிந்துக் கொண்டு செயல்பட்டால், வாழ்க்கை இன்பமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.