
பெற்றோர்களின் கனவு தங்கள் குழந்தைகள் நன்றாக வளர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதாகும்.
அத்தகைய எதிர்பார்ப்பு நடைமுறையில் சாத்தியமாக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களையே சாரும் என்பதை அவர்கள் பூரணமாக உணரவேண்டியது முதல் படியாகும். (first step)
குழந்தைகளுக்கு எந்தத் துறையில் விருப்பம், ஆர்வம், திறமை என்பதைக் கண்டு அறிவது மிக மிக முக்கியம். அதற்கு பொறுமை தேவை பெற்றோர்களிடமிருந்து.
பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் திறமை, விருப்பம், ஆற்றல் போன்றவைகளைக் கண்டு ஊக்குவிக்க அனுபவமும், திறமையும் இல்லாமல் போவது யதார்த்தமான ஒன்றுதான்.
இவற்றை நிவர்த்தி செய்ய சிறந்த துறை வழிகாட்டி அல்லது நிபுணரை அணுகுவது சாலச் சிறந்தது. (guide or expert or professional in the respective fields)
அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் குழந்தைகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து எந்த துறையை தேர்ந்து எடுக்கலாம் என்று காரணங்களுடன் பரிந்துரைக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
தேர்ந்து எடுக்கப்பட்ட துறைக்கு தேவையான நேரம், குழந்தைகளின் படிப்பு, விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நேரம் குறித்தும் கவனத்தில் கொண்டு குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
படிப்படியாக குழந்தைகள் பயிலவும், பயிற்சி செய்து கொள்ளவும் ஆவன செய்யவேண்டும்.
எக்காரணம் கொண்டும் குழந்தைகள் மீது அனாவசியமான அழுத்தங்கள் கொடுக்கக்கூடாது.
குறுகிய காலத்தில் தங்கள் குழந்தைகள் சிறந்த நிபுணர்கள் ஆகிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புக்களை பெற்றோர்கள் தங்கள் எண்ணங்களில் இருந்து ஒதுக்கி வைக்கவேண்டும்.
படிப் படியான முன்னேற்றம் குழந்தகைகளுக்கு தேவையான நம்பிக்கை, தைரியம் இவற்றை அளிக்கும்.
உடன் அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கவும் வழி வகுக்கும்.
மற்ற உடன் குழந்தைகளுடன் பயிலும் பொழுது தாங்களும் செயல் படுத்த வேண்டும் என்ற உத்வேகம் கூடும்.நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக முன்னேற்றம் காணப்படும்.
பெற்றோர்கள் அந்த துறைக்கு பொருத்தமான வகுப்பில் சேர்த்து விட்டு தங்கள் குழந்தைகள் சாதித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் ஒதுங்கிவிடாமல், தங்கள் குழந்தைகளின் அந்த குறிப்பிட்ட துறை வளர்ச்சி பற்றி கண்காணிக்க வேண்டியது, அக்கறை காட்ட வேண்டியது அவர்களது கடமை. அதை செவ்வனே செய்யவேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் எவ்வாறு போட்டியிட வேண்டும் என்பதை வகுப்புக்கள் கற்றுத்தரும்.
நாளடைவில் பயிலும் குழந்தைகள் மேலும் ஆர்வம் செலுத்தவும், செயல்பாட்டில் ஈடுபடவும் ஒவ்வொரு நிலையிலும் ஊக்குவிப்பது முக்கியம் பெறுகின்றது.
குழந்தைகளுக்கு புரியாதவற்றை தெளிவாக விளக்கி புரியவைத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதும் ஒருவகை ஊக்குவித்தல் ஆகும்.
இடையே தேவையான ஓய்வு அளித்து தைரியத்தை அதிகரிப்பதும் ஊக்குவிப்பதில் ஒரு அம்சம் ஆகும்.
தன்னம்பிக்கை, தைரியம், ஆர்வம், மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இவைகள் எல்லாம் சிறப்பாக செயல்பட முடியும் தேவையான ஊக்குவித்தல் சரியான அளவில் தொடர்ந்தால்.