
அரசு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுக்கு தயாராகும்பொழுது உந்துதல் மிகவும் முக்கியமானது. தேர்வுக்கு தயாராவது என்பது ஒரு நீண்ட பயணத்தைப் போன்றது. அதனால் உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும், இலக்கை நோக்கி உந்துதலாக இருப்பதும் அவசியமாகிறது. ஒவ்வொரு சிறிய முன்னேற்றத்தையும் அங்கீகரித்து, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். இது உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். அது நீங்கள் அடைய விரும்பும் பதவியையும், அதற்குத் தேவையானதையும் தெளிவாக வரையறுத்துக் கொண்டால் விரும்பியதை அடைவது எளிதாகும்.
ஒவ்வொரு நாளும் எந்தெந்த பாடங்களைப் படிக்கவேண்டும், எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் சரியாக திட்டமிடுங்கள். இந்த படிப்புத் திட்டத்தை உருவாக்குவது உங்கள் இலக்கை நோக்கி செல்லவும், எண்ணியதை முடிக்கவும் உதவும்.
உங்களைச் சுற்றி ஊக்கமளிக்கும் நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். சாதகமான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவை உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம், மனதிற்கும் உடலுக்கும் ஊக்கம் தரும் வகையில் சில எளிய உடற்பயிற்சிகள் ஆகியவை உங்கள் உடல் மற்றும் மனதிற்கு வலுவை கொடுக்கும்.
TNPSC தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் உள்ளன. அவை நீங்கள் தேர்ச்சி பெற உதவும். அவர்கள் உங்களுக்கு பாடத்திட்டம், மாதிரி தேர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் உந்துதலாக இருக்க உதவுவார்கள். உங்களுக்கான ஆதரவு குழுவில் சேருங்கள். மற்ற ஆர்வலர்களுடன் சேர்ந்து அவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். உந்துதலாக இருக்க ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எதுவும் நம்மால் சாதிக்க முடியும். சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நம்மால் சாதிக்க முடியுமா என்று தயங்கி, சோர்வு வரும்போது, இலக்கை நோக்கி உந்துதலாக இருப்பது அவசியம்.
நேர்மறையான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் நினைப்பதைவிட மிகவும் வலிமையானவர் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
கவலைகளைக் கடந்து கனவுகளை நோக்கிப் பயணியுங்கள். மனம் தான் எல்லாம். நாம் எதை நினைக்கிறாமோ அதுவாகவே ஆகிவிடுவோம். எனவே கடுமையாக முயற்சியுங்கள்.
சில முயற்சிகள் வெற்றி பெறும். சில முயற்சிகள் தோல்வியுறும். ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். எனவே முயற்சிக்க தயங்காதீர்கள்!
கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது. எனவே உங்கள் இலக்கை அடைய உழைப்பையே மூலதனமாகக் கொள்ளுங்கள்.
சவால்களை எதிர்கொள்ளப் பழகினால் சாதனைகளைப் படைக்க முடியும். விடாமுயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை மறக்காதீர்கள். நம்மால் முடியும் என்று நம்புவதே வெற்றிக்கு முதல் படியாகும்.
நம்மை உற்சாகத்துடன் வைத்துக்கொண்டு, தேர்வில் வெற்றி பெறுவதற்கான முழு முயற்சிகளையும் எடுக்க வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும். எண்ணியதை அடைய முடியும். கடுமையான உழைப்பு வெற்றிபெற உதவும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் - ஒருவர் எதை அடைய எண்ணுகிறாரோ, அதை அவர் எண்ணியபடியே அடைவார்; அவர் அந்தச் செயலை செய்வதில் உறுதியாக இருந்தால்!
வள்ளுவரின் கூற்று உண்மைதானே நண்பர்களே!