"எந்த வித வெற்றியானாலும் அதைத் தரும் பண்பு ‘விடாமுயற்சி’ என்பதைத் தவிர முக்கியமானது வேறெதுவுமில்லை. அது எதையும் வெற்றி கொள்ளும், இயற்கையையும் கூட. -John D. Rockefeller.
வெற்றிக்கு அடிப்படை பண்புகள் ஏராளம் இருக்கிறது. ஆனால் அதில் கட்டாயம் தேவைப்படும் ஒரு விஷயம் விடாமுயற்சி. ஆர்வமுள்ள துறையில் விடாமுயற்சியுடன் இயங்கும்போது வெற்றிக்கான வழி நமக்கு புலப்படும்.
"விடாமுயற்சி விஸ்வரூபம்" என்று கேள்விப்பட்டிருப்போம். சிறு ஆர்வம் ஒரு விஷயத்தில் இருந்தால் அதில் மேலும் மேலும் விடாமுயற்சியுடன் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால் அதன் விளைவு விஸ்வரூபம் எடுத்து நமக்கு வெற்றியைத் தரும்.
எறும்புகளின் கூட்டத்தை பார்த்திருப்போம். அதன் அளவை விட பெரிதான சர்க்கரை துகளை விடாமுயற்சியுடன் போராடி நகர்த்திக் கொண்டே செல்லும். அதன் கவனம் முழுக்க சர்க்கரையில் மட்டும் தான் இருக்கும். அது தன்னால் சக்கரையை தூக்க முடியுமா என்று தனது வலிமை பற்றி சிந்திப்பதில்லை. அதன் விடா முயற்சிதான் அதற்கு வெற்றியைத்தரும்.
படிக்காத மேதைகள் பலர் தங்களது விடாமுயற்சியால் மட்டுமே பல மொழிகளைக் கற்று பல அனுபவங்களைப் பெற்று பல நாடுகளை சுற்றி அசைக்க முடியாத மனிதர்களாக, தலைவர்களாக உருவாகி உள்ளனர். இதற்குச் சான்றுகள் அநேகம் நம்மிடம் உள்ளது.
வெற்றிபெற வேண்டும் என்று ஒரு மனிதர் தீர்மானித்து விட்டால் அந்த வெற்றிக்கு அவருக்கு வயதோ மற்ற தடைகளோ நிச்சயம் பொருட்படுத்த மாட்டார். அவர் எந்த துறையில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிறாரோ அதில் மட்டுமே விடாமுயற்சியுடன் செயல்படுவார். சிலர் மிகவும் நொந்து கொண்டு ஏகப்பட்ட முறை முயற்சி பண்ணிட்டேன் ஆனால் எதுவும் நடக்கல சக்ஸஸ் ஆகவே முடியல என்று புலம்புவார்கள்.
புகழ்பெற்ற இந்திய கபடி வீராங்கனை சோனாலி விஷ்ணு ஷிங்காட்டே பற்றித் தெரியுமா? தனது பயிற்சியை தொடங்கும்போது அவரிடத்தில் ஷூ இருந்திருக்க வில்லை. அவரின் குடும்பத்தாலும் அதை வாங்க இயலவில்லை. அதுமட்டும் சவால் அல்ல. அவர் 100 மீட்டர் ஓடுவதற்கே சிரமப்படுவார். அவரின் கால்களையும், வயிற்றுப் பகுதியையும் வலுவாக்க, அவரின் கால்களில் பளுவை கட்டிக் கொண்டு ஓடிப் பயிற்சி செய்வார்.
அந்த கடினமானபயிற்சி மற்றும் போட்டிக்கு பிறகு அவர் நடு இரவில் எழுந்து தனது தேர்வுக்காகத் தயார் செய்வாராம். கடும் பயிற்சிகளுக்கு பிறகு இந்தியா சார்பில் அவர் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இன்று பல விருதுகளுக்கு சொந்தக்காரராக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார்.
இதற்கு ஒரே காரணம் சோனாலி விஷ்ணுவின் தளராத விடாமுயற்சிதான். நாமெல்லாம் ஒருமுறை இருமுறை முயற்சி செய்து கைவிடும் விஷயத்தை இவர் பல முறை முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் இவரின் விடாமுயற்சியின் தன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்வோம்.
நாமும் தளராமல் விடாமுயற்சியுடன் செயல்களில் இறங்கி வெற்றி காண்போம்.