
“அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி..!” என்ற பழமொழியானது, இரண்டு அர்த்தங்களை குறிக்கிறது. ஒன்று, ஒரு நாட்டின் அரசன் நல்ல பண்புடையவராகவும், ஒழுங்கில் சிறந்தவராகவும், நேர்மையில் நியாயமான வராகவும், மேலும் நல்ல சிறந்த நோக்கத்துடனும் செயல்பட்டார் என்றால் அவரது நாட்டையும், மக்களையும் நல்ல பாதையில் முன்னேற்றி கொண்டு செல்ல முடியும்.
மற்றொன்று, சிறந்த நிர்வாகத் திறமையற்ற, தன்னலத்தோடு செயல்படும் அரசனால் அந்த நாட்டுக்கும், அந்த மக்களுக்கும் எவ்வித முன்னேற்றமும், பலனும் கிடைப்பதில்லை. ஆளுமைப் பண்புகள் என்பது அரசனுக்கு மட்டும் அல்ல, கடைக்கோடியில் இருக்கின்ற ஒரு கூலித் தொழிலாளிக்கும் ஆளுமை பண்புகள் என்பது மிக அவசியம்.
ஆளுமை பண்பு பிறரை ஆள்வதற்காக அல்ல. அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வதற்காக..! நாமும் வாழ்வில் சிறந்த ஆளுமை பண்புகளை கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றில் சிறந்த கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு சில பண்புகளை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
எண்ணங்களை சீரமைத்தல்.
நமது எண்ணங்களே நமக்கு நட்பு தோழனாகவும், எதிரியாகவும் மாறுகிறது. ஆதலால் நல்ல நேர்மையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். அப்படியும் முடியவில்லையென்றால் தினமும் 10 நிமிடம் கண்ணை மூடி தியானம் செய்யுங்கள். உங்கள் எண்ண ஓட்டத்தை முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.. அப்பொழுதுதான் எண்ணங்களை சீர்படுத்த முடியும்.
தொடர்பு (பேசுதல்) கொள்ளும் திறன்.
தன்னம்பிக்கையோடு, சிந்தித்து மற்றவரிடம் பேசினாலே நமது தொடர்புகளும் திறன் மேம்படும்..! அதை விட்டுவிட்டு பயத்தோடும், தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தால் நாம் எந்த ஒரு முன்னேற்றத்தையும் அடைய முடியாது. முக்கியமாக எதிரே பேசுபவர்களின் பேச்சுக்கும் மதிப்பு கொடுத்து பேசவேண்டும்.
வெளிப்படையான மனநிலை.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதை நிறுத்திவிட்டு, சமூகத்தில் சமமாக எல்லோரிடமும் வெளிப்படையாக திறந்த மனதோடு பேசவும், இருக்கவும்,பழகவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனசாட்சிக்கு கட்டுப்படுதல்.
தவறான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்க நம் மனதை ஒத்துழைக்கக் கூடாது. நல்ல சிந்தனைகளோடு, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வில் முன்னேறுவதை இலட்சியமாக கொண்டு இயங்க வேண்டும்.
இணக்கத் தன்மையோடு இருத்தல்.
சமூகத்திலும் சரி, குடும்பத்திலும் சரி, அனைவரிடமும் பழகும்போது இணக்கமாக நட்பு பாராட்டி கருணையோடு பழகவேண்டும். நல்ல சொற்களை பயன்படுத்த வேண்டும். ஒருவரை சந்திக்கும் முன் கை கொடுத்து அல்லது வணக்கம் கூறி பேச ஆரம்பியுங்கள்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்.
மகிழ்ச்சி, சோகம், பயம், ஏக்கம், ஏமாற்றம், தவிப்பு போன்ற பல உணர்வுகளின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவேண்டும். வாழ்க்கையின் போதிய கட்டுப்பாடுகளே நமது வாழ்க்கையை சீராக்குகின்றன.
ஊக்கப்படுத்த தெரியவேண்டும்.
ஊக்கப்படுத்துதல் என்பது ஒருவரை பாராட்டுவதில் தொடங்கி அன்பாக தோள் கொடுத்து அரவணைத்து தன்னம்பிக்கை நிறைந்த சொற்களை சொல்வதும்தான். “ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்”இது வெறும் பழமொழி மட்டும் அல்ல வாழ்க்கையின் நிதர்சனம், ஒருவருக்கு எவ்வளவு திறமைகளும், புத்திசாலித்தனமும் இருந்தாலும், அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்..!
அவ்வளவுதான் மக்களே.., நமது எண்ணங்களையும், மன நிலையும் சீராக சிறப்பாக வைத்திருந்தால் எல்லாம் நன்மைதானே... இப்படி இருந்தால் நமக்கு மட்டுமா நன்மை..! சுற்றி இருக்கிறவர்களுக்கும் நன்மைதானே… சிந்திப்போம், செயல்படுவோம், ஒற்றுமையாக ஒன்றுபடுவோம்..! அப்புறம் என்ன மக்களே நாமும் நமக்குள்ளே ஆளுமை பண்புகளை ஆள கற்றுக்கொள்ள வேண்டியதுதான்..!