டென்ஷனை தூளாக்கும் ஜப்பானிய ரகசியம் - வாழ்க்கை வெற்றிக்கு இதைப் பின்பற்றுங்கள்!
அன்றாட வாழ்க்கையே உலகமெங்கும் வேகமான வாழ்க்கையாக மாறி வருகிறது. போட்டி மிகுந்த வாழ்க்கையில் டென்ஷன், டென்ஷன் டென்ஷன்தான்! நிதானத்தை இழக்க வைக்கும் தருணங்கள் எத்தனை, எத்தனை! இதைப் போக்க உதவும் ஒரு ஜப்பானியப் பண்பாடுதான் கமான் ! (GAMAN)
இதை ஜப்பானில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தை முதலே அனைவருக்கும் கற்பிக்கின்றனர்.
கமான் என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது சற்று கஷ்டம்தான்! இதற்கு பொறுமை, விடாமுயற்சி, நிதானத்தை இழக்காமல் கட்டுப்பாடுடன் இருத்தல் ஆகிய அனைத்தையும் அர்த்தமாகச் சொல்லலாம்.
கஷ்டமான தருணங்களில் யார் மீதாவது பழியைப் போடாதே. புகார் செய்யாதே என்பது ஜப்பானியர் ஒவ்வொருவரின் அடித்தளமான பண்பாடாக ஆகி இருப்பதன் காரணம் – கமான்தான்!
உள்ளார்ந்த வலிமை, ஏமாற்றம், மனச்சோர்வு ஆகியவற்றை உதறித்தள்ள வைக்கும் குணமே கமான்!
சவாலான சந்தர்ப்பங்களில் தன் நிலையை இழக்காமல் புன்னகையோடு அதை எதிர்கொள்வதுதான் கமான்!
எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம்.
ஜப்பானிய தலை நகரமான டோக்கியோவில் இரண்டு கோடி பேர்கள் அன்றாடம் அங்குமிங்கும் செல்ல வேண்டி இருக்கிறது. இவர்கள் தங்கள் போக்குவரத்திற்கு நம்புவது புகைவண்டிகளைத்தான்!
ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நெருக்கமாக இருந்து புகைவண்டி வந்தவுடன் இறங்குபவர்களுக்கு வழிவிட்டு கதவு மூடுவதற்குள் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளாமல் உள்ளே ஏறவேண்டும். உள்ளே கம்பார்ட்மெண்டில் நகர்வது கூட முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் ஒரு சண்டையைக்கூட இங்கு பார்க்க முடியாது.
இது புகைவண்டிகளில் மட்டுமல்ல; எங்கெல்லாம் பிரம்மாண்டமான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் படுகிறதோ அங்கெல்லாம் கமான்தான் அனைவருக்கும் உதவும்.
ஃபுகுஷிமாவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. தொடர்ந்து வந்தது சுனாமி.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி டோஹோகு என்ற நகர்ப் பகுதியில் ஏற்பட்ட இந்த கோரமான பூகம்பத்தை ஜப்பான் கமான் என்ற குணத்தைக் காண்பித்து சமாளித்தது.
டோக்கியோ சோபியா பல்கலைக்கழகத்தில் மாந்தர் பண்பாட்டியல் பேராசிரியராக இருக்கும் டேவி ஸ்லேடர் (David Slater, professor of anthropology and director of the Institute of Comparative Culture at Tokyo’s Sophia University) கமானைப் பற்றிக் கூறுகையில் நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி நடக்கும் செயல்களை எதிர்கொள்ளும் உத்தியே கமான்’ என்கிறார்.
ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே வளர்த்துக் கொள்ளும் இந்தப் பண்பாடு எந்த மோசமான சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், அடுத்தவர் மீது புகார் சொல்லாமல், நிதானத்துடன் அதை எதிர்கொள்ள வைக்கும்.
இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டு பொருளாதாரத்தின் அடிநிலையை எட்டிய ஜப்பானை மேலே வரவைத்தது அனைத்து ஜப்பானியரும் தங்கள் கமானைக் காண்பித்ததுதான்!
இந்தப் பண்பாட்டைத்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். குறிப்பாகப் பெண்களுக்கு இன்னும் அதிகமாகச் சொல்லித் தருகிறார்கள்! எமோஷனல் ரெகுலேஷன் எனப்படும் இந்த உணர்ச்சிக் கட்டுப்பாடு நீண்ட கால மனக்கட்டுப்பாட்டைத் தருகிறது. வாழ்க்கையில் வெற்றியைத் தருகிறது.
கமான் சுரு – இது ஜப்பானியரின் வேத மொழி. ‘நான் பொறுத்துக் கொள்வேன்’ என்பதுதான் இதன் அர்த்தம்.
பிபிசி இதைப் பற்றி பெரிய நிகழ்ச்சியையே நடத்திவிட்டது.
ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் வியப்பதெல்லாம் இந்த கமான் பண்பாட்டைப் பற்றித்தான்! உலகப்போரில் அடிபட்ட ஜப்பான் தொழில் முன்னேற்றத்தில் உலகின் வழிகாட்டியாக ஆனது அதன் சிறப்பான இந்தப் பண்பாட்டினால்தான்.
ஆக, உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவரும் உடனடியாகப் பழகி அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டிய ஒரு பண்பாடு – கமான்!
கமான் சுரு!