

இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் வாழ வேண்டும் என்கிற ஆசை இயற்கையாக உண்டு. இது பிறவி குணம். அந்த குணம் தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
அப்படி வாழ, பல வழிமுறைகளையும், கோட்பாடுகளையும், நெறிகளையும், சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் நம்முடைய மதங்கள் நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றன.
இப்படியாக அதை கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு அமைதியான, ஆனந்தமான வாழ்க்கை நமக்கு கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை மனித குல வாழ்வியலில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
மற்ற உயிரினங்கள் போல மனிதன் இருந்தாலும் அவனால் கவலை இன்றி வாழ முடியுமா என்றால் அது ஒரு பெரிய கேள்வி குறிதான்!
காரணம் மனிதன் ஆளப்பிறந்தாலும், அடிமையாக வாழ பழகிக் கொண்டாலும் அவனை ஆட்கொள்வது அவனுடைய மனம் தான்.
அந்த மனதிற்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை, தத்துவம் விளக்கி, ஒரு தத்துவத்தை முன்வைக்கிறது. அது காலப்போக்கில் மாற்றமடைந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
மனம், மனிதன் மற்றும் இந்த உலகம் பற்றி ஒரு உறவை சொல்லும்போது பல மதங்கள், பல மத கோட்பாடுகளை ஏற்படுத்தி மனித குலத்தை வழிநடத்தி அதன்படி ஒரு புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இப்படியாக அடையாளப்பட்டு மனிதன் தன் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். அவனுடைய தத்துவார்த்த புரிதல் அவனை வாழ்க்கை முழுவதும் கைகுலுக்கி அழைத்துச் செல்கிறது.
மனிதன் அவனுடைய உறவை இந்த உலகத்தில் எவ்வாறு ஏற்படுத்துகிறான் என்பதுதான் ஒவ்வொரு தத்துவ அறிஞர்களுக்கும் சவாலான காரியமாக இருக்கிறது.
ஒரு காட்சியை மனம் காணும்போது அதை ஆன்மீகம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது நம்முடைய புரிதலை மேலும் அதிகமாக்கும்.
உதாரணமாக, சூரியன் மேற்கே மறைகிறது என்கிற காட்சி ஒரு ஆன்மீகவாதிக்கு ஒரு ஆற்றலாக புலப்படும்.
அதுவே, ஒரு விஞ்ஞானிக்கு ஒரு புவியீர்ப்பு இயக்கமாக புலப்படும்.
ஒரு தத்துவஞானிக்கு ஒரு பொருளாகவோ, ஒரு கருத்தாகவோ, ஒரு செயலாகவோ புலப்படும்.
நாம் இந்த உலகத்தினுடைய உறவை வெளியில் இருந்து தான் பெறுகிறோம்.
அந்த உறவை நாம் நம் மனதில் ஆழ செலுத்தி, ஆராய்ந்து அதன் மூலம் நாம் இருப்பை நாம் உணரத் தொடங்கும் போது அங்கே ஒரு உண்மையானது புலப்படும்.
அந்த உண்மையானது வாழ்க்கையில் பல படிமங்களில் நம்மை ஆட்கொள்ளும் அல்லது அனுபவமாக நம்மை வழிநடத்தும்.
அந்தப் படி நிலைகள்,
இன்பம் -துன்பம்,
ஏக்கம்- எதிர்பார்ப்பு,
நல்லது -கெட்டது,
கருப்பு- சிவப்பு,
நல்லவர் -கெட்டவர்,
என்கிற பாகுபாடு.
காரணம் நம் மனதானது எல்லாவற்றிலும் ஒரு இருமை தன்மையுடன் செயல்படுகிறது. அது எழாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒரே வழி எல்லாவற்றையும் ஒருமையில் காண பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடையாக, ஓடும் ஆறாக, விழும் நீரோடையாக என்றும் பயணித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம்.
அந்த இயக்கம் கீழ்காணும் குணாதிசயங்களை கொண்டுள்ளது.
1. என்றும் மாறக்கூடியது.
2. மாற்றங்கள் இயல்பானவை.
3. சிந்தனைகள் செம்மைபடுத்தப்பட வேண்டும்.
4. சிந்தனையை கட்டுப்படுத்தவோ, அடையாளப்படுத்தவோ, உருவகப்படுத்தவோ செய்யாமல் நமக்குள்ளே அந்த புரிதல் ஏற்பட வேண்டும்.
5. நான் யார்? இந்த கேள்வி நம்மிடம் தான் இருக்கிறது. நம் இருப்பு தான் நம் சுயம். அதை உணர்ந்தால் நமக்கு ஏற்படும் ஜெயம்.
6. இந்த உணர்வு இயல்பாக இருக்க வேண்டும்.
7. அப்போது அங்கே பயம் இருக்காது. தான் என்கிற தன்முனைப்பு இருக்காது.
8. எப்பொழுதும் போல் வாழ்க்கையை நாம் கொண்டாடிக் கொண்டே இருப்போம்.
9. முடிவாக சொன்னால் நாம் காலத்தையும் இடத்தையும் மீறி நம்முடைய அனுபவமானது நம்மை ஆட்கொண்டு அதனூடே பயணித்து அதன் மூலம் நாம் அடையக்கூடிய அந்த வெறுமை தான் நம் வாழ்க்கைக்கு முழுமையை தரும்.
அந்த அருமையான சமயத்தில் நம்முடைய சிந்தனையும் செயலும் ஒன்றாக பயணித்து ஒருமைப்பட்டு ஒரு உன்னத அனுபவத்தை நமக்கு கொடுக்கும். இந்த அனுபவம் நம் இருப்பில் எந்த நொடியிலும் ஏற்படலாம்.