
உடல் ஆரோக்கியம் என்றால் என்ன தெரியுமா? உடலை உடற்பயிற்சி செய்து வாழ்வியல் முறையில் உணவு உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெயர்தான் உடல் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அப்படி அல்ல உடல் ஆரோக்கியம் என்பது மனநிலை சம்பந்தப்பட்டது.
நம்முடைய மனநிலை ஒரு நிலையில் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல்நிலை 100% மிகச்சரியாக இருக்கும் இதை யாராலும் மறுக்க முடியாது மருத்துவ ரீதியான உண்மையும் கூட.
உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’ என்கிறது.
ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மன அளவில் மகிழ்ச்சி இல்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.
இந்தச் செய்தி பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப்போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர். உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்;
அதுபோலவே மனஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப்போகும். மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் உடலின் ஆரோக்கியத்திற்கு உந்து சக்தியாக அமையும்.
இதைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வது என்பது ஒரு அற்புதக் கலை. உடல் நோய் வாய்ப்படும் பொழுது மனதை திடமாக இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவைவிட மனம் நொந்து இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவு என்பது அதிகம் ஆகிறது.
எனவேதான் மருத்துவர்கள் தைரியமாக இருங்கள் என்று நோயாளிகளிடம் கூறுவதைக் கண்டு இருக்கிறோம். உடல் ஆரோக்கியம் என்கிறதை அடைவதற்கு முதலாவது மன ஆரோக்கியம் முக்கியமானதாக இருக்கிறது.
நம்மில் பலருக்கு தினமும் மனதையும், உடலையும் மேம்படுத்த நேரம் இல்லை என்பார்கள். ஆனால், தினமும் உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சிக்கு என்று செலவு செய்பவர்கள் வாழ்க்கையை தினம் தினம் முழுமையான ஆரோக்கியத்துடன் முழமையான இனிமையுடன் அனுபவிக்கலாம்.
''நோயற்ற வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை".
இனிமையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது, உடல், மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்து, இயங்கி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம்.